Wednesday, December 23, 2009

அழகாய் சிரிக்கிறார்கள் பெண்கள்-2

8.30 மணி ஸ்பெஷல் கிளாசுக்கு கிளம்பாமல் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த போது காலையில் வாங்க வேண்டிய கடைசி கட்ட திட்டையும் வாங்கி முடித்தான்.
"எருமை மாடு ஏன் என் உயிரை வாங்குற?கூப்பிட்டு விட்டா நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன்"

சரி.காலைக்கு இது போதும் என நினைத்ததால் ரிமோட்டை எடுத்தான்.சரியாக அவன் ஆப் பட்டனில் கை வைத்தபோது யாரோ ஒரு பெருசு இந்த நாள் இனிய நாள் என சொல்லிக்கொண்டிருந்தது.கை தானாக ஆப் பட்டனை அழுத்த டிவி ஆப் ஆகியது. இப்படி பொறியியல், கம்ப்யூட்டர் என டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்தில் பிறந்ததற்க்கு கல் காலத்தில் பிறந்திருந்தால் படிக்காமல் ஜாலியாக இருந்திருக்கலாமே என நொந்து கொண்டே பள்ளிக்கு போனான்.வழக்கம் போல பள்ளிக்கூட வாசலில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள்.

தலைமை ஆசிரியையின் அறை வாசலில் ரகுவின் அம்மா உட்கார்ந்திருந்தார்கள்.அவனுக்கு எதுவோ சரியாக படவில்லை.கவனிக்காதவாறு வகுப்புக்கு சென்று விடலாமா என யோசித்தான். கூப்பிட்டால் பேசலாம் இல்லையென்றால் எஸ் ஆகிவிடவேண்டுமென நினைத்துக்கொண்டே வேகமாக நடந்தான்.அவனது நல்ல நேரமோ என்னவோ அவனை ரகுவின் அம்மா கவனிக்கவில்லை.

கடைசி பெஞ்சில் நரேந்திரனும் ராஜாவும் இவனுக்காக காத்திருந்தார்கள்

என்ன மாப்ள? என்றான். அவர்கள் அவனை அமைதியாக இருக்கும் படி சைகை காட்டினார்கள். ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.அதற்க்குள் அசெம்பிளி மணி அடித்தது.வழக்கமாக நடக்கும் அசெம்பிளி போல அன்று இல்லை. காற்றில் கூட டென்ஷன் கலந்திருந்தது.அசெம்பிளி முடிந்ததும் 10 ஏ மாணவ மாணவிகளை மட்டும் காத்திருக்கச்சொன்ன போது அவனுக்கு லேசாக வேர்க்கத்தொடங்கியது.மெதுவாக திரும்பி ராஜாவை பார்த்தான் அவனும் இவனை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

டியர் ஸ்டூடன்ட்ஸ்

தலைமை ஆசிரியையின் குரல் தான் அது.அவன் நிமிர்ந்து மேடையை நோக்கினான்.

உங்க வகுப்புல யாரோ ஒருத்தர் தப்பு பண்ணியிருக்கீங்க அவங்களே வந்து சாரி கேட்டுட்டா அந்த விசயத்த அப்படியே விட்டுடலாம்.

அவனுக்கு அப்போது தான் சிரிப்பு வந்தது. என்ன விஷயம்னு சொன்னா தான யாராவது ஒத்துக்குவாங்க.ஒவ்வொரு நாளும் எத்தனையோ தப்பு நடக்குது அதுல இது எதை கேக்குதோ?தனக்கு பக்கத்தில் இருந்த மாணவிகள் வரிசை பக்கம் லேசாக கண்ணை திருப்பினான். ஹேம்ப்ரியா வெயில் தாங்கமுடியாமல் தனது கைக்குட்டையால் வியர்வையை ஒற்றிக்கொண்டிருந்தாள். பொறுத்துப்பார்த்த மேடம் மாணவிகளை மட்டும் தன் அறைக்கு வர சொல்லிவிட்டு வேகமாக போனாள்.ஹேமா இன்னமும் வியர்வையை ஒற்றிக்கொண்டிருந்தாள்.சந்திரன் அவளை திரும்பி பார்த்துவிட்டு வகுப்பறை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

முதல் பீரியட் முடிய சில நிமிடங்களே இருந்த போது தான் மாணவிகள் திரும்ப வந்தார்கள்.கடைசி பெஞ்ச் வனிதா விடம் என்ன ஆச்சு என பேப்பரில் எழுதி தூக்கிப்போட்டான் நரேந்திரன்.அவளும் ஏதோ பதில் எழுதி தூக்கிப்போட்டாள். நரேந்திரன் முகத்தில் ஆச்சரியம் படர்ந்தது ஒரே நொடி தான் முகத்தை மீண்டும் நார்மலாக்கி விட்டு சந்திரனிடம் நீட்டினான்.அவனும் ஆவலாய் அதை வாங்கிப்பார்த்தான்

"ஹேமா ரகுவுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கா"

ராஜாவையும் நரேந்திரனையும் திரும்பி பார்த்தான். ராஜா அமைதி என சைகை காட்டினான்.சந்திரன் அந்த பேப்பரை வாயில் போட்டு சாப்பிடத்தொடங்கினான்.

Sunday, December 20, 2009

இரவுக்கு ஆயிரம் கண்கள்

அது நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் இடைபட்ட ஒரு இரவு. செத்தவர்கள் சொர்க்கம் போனார்கள் உயிரோடு இருப்பவர்கள் நரகத்தில் விழுந்தார்கள்.

Monday, November 9, 2009

அழகாய் சிரிக்கிறார்கள் பெண்கள்-1

எதிர் வீட்டு செந்தில் பக்கத்து வீட்டு மாலதியை காதலிக்கிறான்.முக்கு வீட்டு மூர்த்தி மாடி போர்ஷன்ல இருக்குற தேவியை காதலிக்கிறான்.வகுப்பறையில் அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கிருஷ்ணகுமார் அதே வகுப்பில் படிக்கும் ஜெயந்தியை காதலிக்கிறான்.நண்பர்கள் எதிரிகள் தெரிந்தவன் தெரியாதவன் என எல்லோரும் காதலித்த போதும் காதலும் இல்லாமல் காதலியும் இல்லாமல் அவன் மட்டும் தனித்து நின்றான்.அவன் தான் சந்திரன்.

அவனுக்கும் இவர்களை பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக தான் இருக்கும்

ட்ரீங்க் ட்ரீங்க்

அந்த அலாரத்தின் ஒலி வீடு முழுக்க எதிரொலித்த போதும் சந்திரன் எழுந்திரிக்கவில்லை.கனவிலாவது காதல் கிட்டாதா என்ற ஏக்கத்தோடு கனவுகளோடு போராடிக்கொண்டிருந்தான்.இரண்டொரு நிமிடங்களில் அவன் போராட்டத்துக்கு விடை கிடைத்தது

"எருமை மாடு எழுந்திரு ட்யூஸனுக்கு நேரமாகுது.ஒழுங்கா படிக்கலைனா மாடு தான் மேய்க்கனும்"

வழக்கமாக கேட்கும் அதே வசனம் தான்.சோம்பல் முறிப்பதற்க்குள் இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் திட்டு வந்து சேர்ந்தது. இதுக்கு மேல தூங்க முடியாது என உறுதியாக தெரிந்த பின்பு மெதுவாக ஆமை வேகத்தில் எழுந்தான் அவன்.பல் விலக்குவதற்க்குள் மூன்றாம் கட்ட திட்டும் விழுந்துவிட்டது.
"எருமை மாடு பாத்ரூமுலயே தூங்கிட்டியா?"

ஒவ்வொரு நாளும் போராட்டம் என்பது அவன் காலையில் எழுந்து ட்யூஸன் கிளம்புவதில் இருந்து தொடங்கும். ஆறு மணி ட்யூஸனுக்கு அவன் எழுந்திருப்பதே ஆறு மணிக்குதான் அப்போது ஆரம்பிக்கும் போராட்டம் இரவு படுக்க போகும் வரை தொடரும். போனவருடம் வரை அவனது அம்மா பாமா அன்பாக தான் இருந்தாள்.பத்தாம் வகுப்பு ஆரம்பித்த பிறகு ஏன் அம்மா மாறி விட்டாள் என்பது தான் அவனுக்கு புரியவில்லை. அவனிடம் கத்தி கத்தியே தனக்கு பிரஷர் வந்துவிட்டது என அடிக்கடி அம்மா சொல்லுவாள்.ஆனால் அம்மாவால் ஹை டெசிபெலில் பேசாமல் இருக்கமுடியாது என அவன் அறிந்திருந்தான்.பள்ளிக்கூடம் வீடு என மாறி மாறி திட்டு வாங்கியதில் மிச்ச சொச்சம் இருந்த சொரணையும் போய்விட்டது.ஒரு வழியாக ட்யூஸன் கிளம்புவதற்க்குள் 6.15 ஆகிவிட்டது.சரி அங்க போயும் திட்டு வாங்கிக்கலாம் என மெதுவாக தனது சைக்கிளை ஓட்டத்தொடங்கினான்.

அவன் கிளம்பிய பிறகு தான் பாமாவிற்க்கு மூச்சே வந்தது.ஒரு டம்ள்ர் தண்ணியை குடித்துவிட்டு வாசலில் வந்தமர்ந்தாள். இவன் வயசு பிள்ளைங்க எல்லாம் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்குதுங்க.இவன் மட்டும் ஏன் இப்படி பண்றான்?மக்கு பிள்ளைனா கூட பரவாயில்ல நல்லா படிக்குற பையன் தானே. ஒரு வேளை சேர்க்கை சரி இல்லையோ?

பாமா காபி போடு. சந்திரன் அப்பாவின் குரல் அவளது சிந்தனையை கலைத்தது.இன்று மிச்சம் இருக்கும் வீட்டு வேலையை நினைக்கும் போதே அவளுக்கு மலைப்பாக இருந்தது.

பாமா
இதோ வர்றேங்க

பாமா கிச்சனுக்கு விரைந்தாள்.

சந்திரன் திருப்பதி காலனியை நெருங்கும் போது பின்னால் இருந்து யாரோ பெல் அடிப்பது போல் இருந்தது. இடது பக்கம் பாதி தலையை திருப்பினான் ஹேமப்ரியா வந்து கொண்டிருந்தாள். உலக அதிசயம் தான் ஹேமப்ரியா ட்யூஸனுக்கு லேட்டா?அவனால் தன் கண்ணையே நம்பமுடியவில்லை.

மாப்ளே மாப்ளே

பழகிய குரல் போல் இருக்கவே திரும்பி பார்த்தான்.அவளுக்கும் பின்னால் லொங்கு லொங்கென்று சைக்கிளை மிதித்து வந்து கொண்டிருந்தான் நரேந்திரன்.அவனுக்காக சந்திரன் கொஞ்சம் மெதுவாக ஹேமப்ரியா அவனை முந்திக்கொண்டு சென்றாள். இருவரும் ட்யூஸனுக்குள் போன போது ஆர்க்கானிக் கெமிஸ்ட்றி நடத்திக்கொண்டிருந்தார் நாராயணன்.இவர்களை பார்த்ததும் பாடத்தை நிறுத்தினார்.

என்னடே சந்திரா இன்னிக்கும் ட்யூஸனுக்கு லேட்டா வந்திருக்கே?தனியா வந்தா திட்டுவேன்னு கூடவே உன் நண்பனையும் லேட்டாக்கிட்டியாடே?

இல்லை சார் லேட்டாயிடுச்சு

அது தான் மணி பாக்கத்தெரிஞ்ச குழந்தைக்கு கூடத்தெரியுமே. நான் ஏன் லேட்டுனு கேட்டேன்

சந்திரன் திரும்பி நரேந்திரன் மூஞ்சியை பார்த்தான்.அவன் யாரையோ திட்டுவது போல வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான்.
சரி டே ரெண்டு பேரும் உள்ளாற வாங்க.

கடைசி வரிசைக்கு முந்தின வரிசையில் முத்துராஜா பக்கத்தில் அவர்களுக்கான இடம் காலியாய் இருந்தது.

டேய் அவளை மட்டும் ஒன்னுமே சொல்லாம உள்ள விட்டான்

வந்தவுடன் பற்றவைத்தான் முத்துராஜா.

அவன் கிடக்கான் விடு டா

வந்தது லேட் இதுல என்னடே பேச்சு?
நோட்ஸ் காட்ட சொன்னேன் சார்.
இன்னிக்கு உங்க அப்பாவுக்கு பேச வேண்டியிருக்கும் போல

அவன் பதிலேதும் பேசவில்லை.

ஹைட்ரஜன் வர்றான் ஆக்சிஜனும் வர்றான். ரெண்டு பேரும் மோதுற இடத்தில் டமால்.வாட்டர் அதாவது தண்ணீர் உருவாகுறான்.
நாராயணன் நடத்துற ஸ்டைல் இது தான். அவர் இப்படி சொன்னவுடனே ஏதோ பெரிய காமெடியை கேட்ட மாதிரி இந்த படிப்பாளி கூட்டமெல்லாம் சேர்ந்து சிரிப்பாங்க. இதுல என்ன காமெடி இருக்கு? வாத்தியார்களும் இந்த படிப்பாளிகளும் இருக்கும் வரை தன் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போவதில்லை என்பதை நினைத்து நொந்துகொண்டான்.

Tuesday, October 27, 2009

அன்று மழை பெய்தது - 12

ஹரிதா:என்ன சொல்ற?
மணிசங்கர்:உன்னோட பிறந்த நாளுக்கு ஒரு மொபைல் வாங்கி குடுத்தேன்ல அதுல ஒரு ரிக்கார்டர் இன்ஸ்டால் பண்ணி அதை ஹைட் பண்ணி வைச்சிருந்தேன்.உன் மேல சந்தேகப்பட்டு இல்ல.ஒரு வேளை தாமோதரன் உனக்கு போன் பண்ணி தொல்லை குடுத்தா அத நான் தெரிஞ்சுக்கனும்ல அதனால தான் அப்படி பண்ணேன்.நீ யார் கூட பேசினாலும் அது ரெக்கார்ட் ஆகி தனியா ஸேவ்(save) ஆயிடும்.
அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல உன் மொபைல பாக்கனும்னு வாங்கினேன்ல அப்போவே நீ பேசுனத என் மொபைலுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டேன்.தாமோதரன் கூட என்ன பேசுனனு நியாபகம் இருக்கா?

மறுமுனையில் மரண அமைதி நிலவியது.

மணிசங்கர்:அந்த ரெக்கார்டிங்க கேட்ட உடனே தாமோதரனை கூப்பிட்டு பேசினேன்.அந்த மழை பெய்த இரவு முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு ஆர்க்குட்ல அவன் உனக்கு திரும்பவும் ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் (Friend request) குடுத்திருக்கான்.நீயும் அத ஏத்துக்கிட்ட.மணிக்கணக்கா ரெண்டு பேரும் சாட் பண்ணியிருக்கீங்க.முதல் முதலா சத்யம் தியேட்டர்ல மீட் பண்ணியிருக்கீங்க.இது நடந்து ஒரு மாசத்துல ரெண்டு பேரும் மகாபலிபுரம் போயிருக்கீங்க.அங்க என்ன நடந்ததுனும் எனக்கு தெரியும்.எந்த தப்புக்கும் ஒரு காரணம் இருக்கனும் ஹரிதா.நீ பண்ண தப்புக்கு என்ன காரணம்னு மட்டும் சொல்லு.ப்ளீஸ்

அவள் நடுங்கும் குரலோடு பேசத்தொடங்கினாள்

ஹரிதா:எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே நான் குழந்தையா இருக்கப்ப இருந்தே வேலைக்கு போயிருவாங்க.அப்போ இருந்து நானே தான் வளர்ந்தேன்.ஏதோ ஒரு சந்தோஷம்னாலோ கஷ்டம்னாலோ அத ஷேர் பண்ணிக்க எனக்கு யாருமே இல்ல.அப்போ தான் என் வாழ்க்கைல இன்டெர் நெட் வந்தது.சாட்டிங்க் எனக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷமா நான் நினைச்சேன்.கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிஞ்சது என் கூட சாட் பண்ற எல்லோருமே வேற ஒன்ன எதிர்பாக்குறாங்க.ஒருத்தன் ரெண்டு பேரு இல்ல.பதினாலு வயசு பையன்ல இருந்து பல்லு போன கிழம் வரை எல்லோருக்கும் ஒரே விஷயம் தான்.சரின்னு நானும் முதல்ல சாட்டிங்க் தானேனு அவங்க இஷ்டப்பட்ட படி பண்ணேன்.அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல நான் அதுக்கு அடிமை ஆயிட்டேன்.அப்புறம் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் டேட்டிங்க்.தாமோதரனும் அப்படி தான்.உன்னை பாக்குற வரை நான் அப்படி தான் இருந்தேன். நான் இத்தனை வருஷமா ஏங்கிகிட்டு இருந்த அன்பை நீ எனக்கு கொடுத்த.
மணிசங்கர்:தாமோதரன் அப்படி இல்ல ஹரிதா.அவன் உன்னை லவ் பண்றான்
ஹரிதா:நீ என்னை லவ் பண்ணலையா?
மணிசங்கர்:பண்ணினேன்
ஹரிதா:யோசிச்சு தான் சொல்றியா?
மணிசங்கர்:முடிவு பண்ணிட்டு தான் பேசறேன்.
ஹரிதா: நீ என்ன பெரிய யோக்கியனா?இதை எல்லாம் ஆரம்பிச்சு வைச்சவனே நீ தானே.
மணிசங்கர்:அதனால இதை நானே முடிச்சும் வைச்சிடறேன். நீ தாமோதரன் கூட சேர்ந்து வாழுற வழிய பாரு
ஹரிதா:நான் யாரை லவ் பண்ணனும்னு நீ எனக்கு சொல்ல வேணாம்.
மணிசங்கர்:நீ இன்னும் திருந்தல ஹரிதா.
ஹரிதா:என்ன சொல்ற?
மணிசங்கர்:இப்போ கூட எங்கிட்ட போன் பேசிட்டே சாட் பண்ணிட்டு தானே இருக்க?
ஹரிதா:இல்ல.
மணிசங்கர்:பொய் சொல்லாத ஹரிதா.உன் கூட சாட் பண்ணிட்டு இருக்குறது நான் தான்.என்னோட ஃபேக் ஐடி(fake id). நேத்து கூட கேம்(cam)ல மூஞ்சிய காட்டுனியே.நான் கூட இன்னிக்கு போட்டோ அனுப்புறேன்னு சொன்னேனே.மறந்துட்டியா ?

சாட்டிங்க் விண்டோவை மூடினான் மணிசங்கர்.ஹரிதாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பதட்டம் வேறு சேர்ந்து கொண்டது.

ஹரிதா:இனி உங்கிட்ட பேசி ஒரு பிரோயஜனமும் இல்ல. நீ ஒரு சைக்கோ
மணிசங்கர்: சரி நான் சைக்கோவாகவே இருந்திட்டு போறேன்.கதை இன்னும் முடியல.அதை மட்டும் கேளு.

ஹரிதாவின் முகத்தில் கேள்விக்குறிகள் படர்ந்தன.

மணிசங்கர்:நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தினப்ப எங்க போனலும் உன் டிஜிட்டல் கேமராவை எடுத்துட்டு தான் போவியாமே.பெட் ரூம் உள்பட. நெறைய ஜலபுல ஜங்க்ஸ் போட்டோலாம் எடுத்தீங்கலாமே.அவன் சொன்னான்.எப்படியும் போட்டோனு ஒன்னு எடுத்தா அத உன் லேப்டாப்புல ட்ரான்ஸ்பர் பண்ணியிருப்பனு தெரியும்.அதுனால தான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப உங்கிட்ட லேப்டாப் வாங்கினேன்.
ஹரிதா சிரித்தாள்

ஹரிதா:அதையெல்லாம் லேப்டாப்புல வைச்சுகிட்டே உங்கிட்ட குடுக்க நான் என்ன லூசா?
மணிசங்கர்:இல்ல ஹரிதா.ரெக்கவரி(recovery) தெரியுமா? நீ எப்போவோ டெலிட் பண்ண பைலை கூட தேடி எடுத்திரலாம்.தேதி மட்டும் தெரிஞ்சா போதும்.நானும் அத தான் பண்ணேன்.
ஹரிதா:ஏன் இப்படி எல்லாம் பண்ற?உனக்கு என்ன வேணும்?
மணிசங்கர்:அவன் அவன் பண்ணினதுக்கு அவன் அவனுக்கு தண்டனை. நான் ஒரு தப்பு பண்ணினேன்.அது எங்கயோ சுத்தி எனக்கு தீராத வலிய இப்போ தந்திருச்சு. நீ ஒரு தப்பு பண்ணியிருக்க. அதுக்கு உனக்கு நான் தண்டனை கூட தரல.ஒரு வாய்ப்பா தர்றேன். ஒரு குடும்பம், பாசம் இதுக்கெல்லாம் ஏங்குனதா சொல்றியே அதை எல்லாம் உனக்கு தர ஒருத்தன் ரெடியா இருக்கானே.அதை மட்டும் நெனைச்சு பாரு
ஹரிதா:நான் முடியாதுனு சொல்லிட்டா?
மணிசங்கர்:அந்த போட்டோவெல்லாம் தாமோதரனுக்கு மெயில் அனுப்பிட்டேன்.இனி நீயாச்சும் அவனாச்சும். நான் அடுத்த வாரம் இந்த ஊரை விட்டு போயிடுவேன்.

நான் ஹரிதா, பாட்டு சூப்பர்,டபுள்ஸ் ஓட்டத்தெரியுமா?இனிமே குடிக்காத ப்ளீஸ்.கல்யாணம் பண்ணிக்கலாமா? நீ என்ன பெரிய யோக்கியனா?அதையெல்லாம் லேப்டாப்புல வைச்சுகிட்டே உங்கிட்ட குடுக்க நான் என்ன லூசா?
இதுவரை அவள் பேசியது எல்லாம் மனதிற்க்குள் ஓடியது

மணிசங்கர்:இனிமே நான் சாகுற வரை உன்னை பாக்கக்கூடாது.உன் குரலை கேட்கக்கூடாது.குட் பை ஹரிதா.ஆல் தி பெஸ்ட்.

அழுது கொண்டே போனை கட் பண்ணினான் மணிசங்கர்.அதிர்ந்து போய் போனை பார்த்தாள் ஹரிதா.தாமோதரன் காலிங்க் என வந்தது.
அவள் பயந்து கொண்டே போனை எடுத்தாள்.தாமோதரன் சிரித்துக்கொண்டே போனை காதில் வைத்தான்.

முற்றும்.
©:S.Karthikeyan
என்னுரை:
இந்த கதை உருவாக பெரிதும் காரணமாக இருந்த திரு ப.நாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.

Wednesday, September 23, 2009

அன்று மழை பெய்தது-11

ஹரிதா:என்ன த்ரில்லரா?
மணிசங்கர்:கதைய கேட்டுட்டு நீயே சொல்லு
ஹரிதா:சரி சொல்லு.
மணிசங்கர்:ஹீரோ சென்னைல வேலை இல்லாம சுத்திட்டு இருக்கான்
ஹரிதா:ஹீரோ பேரு என்ன மணிசங்கரா?
மணிசங்கர்:அது உன் இஷ்டம்
ஹரிதா:சரி சொல்லு
மணிசங்கர்:ஒரு நாள் நைட் சரக்கு எல்லாம் வாங்கிட்டு ரூமுக்கு வர்றான்.சரக்கு வாங்கினது போக மிச்சம் அவன் கிட்ட ஒரு ரூபாய் தான் இருந்தது.அப்பா கிட்ட பணம் போட்டு விட சொல்லலாம்னு பாத்தா லேட் ஆயிருச்சு.காலையில சொல்லிக்கலாம்னு தண்ணி அடிச்சுட்டு தூங்கிட்டான்.
ஹரிதா:சொந்த கதை போல
மணிசங்கர்:ஆமா அப்படியும் சொல்லலாம்
ஹரிதா:சரி மேல சொல்லு
மணிசங்கர்:காலையில எழுந்திருச்சு பாத்தா மொபைல்ல பேலன்ஸ் இல்ல.ஹலோட்யூனுக்கு எடுத்துட்டானுங்க
அவள் சிரிப்பது அவனுக்கு கேட்டது.கதை முடியும் போது அவள் என்ன மன நிலையில் இருப்பாளோ என யோசித்தான்.
ஹரிதா:ஹேய் கதை இன்டிரஸ்டிங்கா போது டா..ம் ம் சொல்லு.
மணிசங்கர்:அவன் ஒரு பொன்னோட ஆர்க்குட் அக்கௌன்ட ஹேக் பண்ணி அத வச்சு ஒரு பையன ஏமாத்தி அவன் நம்பர்க்கு ரீ சார்ஜ் செய்ய வைச்சுடரான்.அப்புறம் அடுத்த மாசம் வேற போஸ்ட் பெய்ட் சிம் மாத்திடுறான்.புது சிம் வந்த நேரம் அவனுக்கு வேலை கிடைச்சிடுது.யார் அக்கௌன்ட அவன் யூஸ் பண்ணானோ அந்த பொண்ணும் அவன் கூட வேலை பாக்குறா.ஒரு கட்டத்தில அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுடுறான்.அவளும் அவனை லவ் பண்றா.அப்போ அவங்க ஆபிஸ்க்கு ஒரு புது மானேஜர் வர்றார்.அவர் தான் அந்த ரீ சார்ஜ் செஞ்சு விட்டவர்.மானேஜரும் அந்த பொண்ண மறக்கல.கதை புரியுதா ஹரிதா?
எதிர் முனையில் லேசாக அழுகை சத்தம் கேட்டது.
மணிசங்கர்:ஹரிதா?
ஹரிதா:பேசாத.நீ என்ன ஏமாத்திட்ட.
அவள் பேச்சில் சுத்தமாக அன்பு மறைந்து போயிருந்தது.
மணிசங்கர்:ஆமா உங்கிட்ட எப்படி மன்னிப்பு கேக்குறதுனு எனக்கு தெரியல அதுனால தான் கதை மாதிரி சொன்னேன்.
ஹரிதா:நீ இப்படி ஒரு கேவலமான விஷயத்த பண்ணுவனு நான் நெனைச்சு கூட பாக்கல.அது எப்படி அடுத்தவங்க அக்கௌன்ட ஹேக் பண்ணி..உன்னை நான் எவ்ளோ நம்பினேன்?இப்போ மட்டும் சொல்ற?என்ன திருந்திட்டியா?
மணிசங்கர்:இல்ல ஒரு பாடம் கத்துக்கிட்டேன்.
ஹரிதா:என்ன?
மணிசங்கர்: போனை கட் பண்ணிடாம மிச்ச கதையையும் கேட்டா உனக்கே புரியும்.தாமோதரன பாத்த உடனே அவனால உனக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு நான் பயந்தேன்.அவனும் அதுக்கு ஏத்தாப்புல தான் நடந்துகிட்டான்.அன்னிக்கு நாம மொபைல் வாங்க போனப்ப அங்க அவனை பாத்தேன்.அடுத்த கொஞ்ச நாள்ல அவன் எனக்கு ட்ரான்ஸ்பர் குடுத்தான்.அவன் உனக்கு தொல்லை குடுக்கிறான்னு எனக்கு புரிஞ்சிருச்சு ஆனா நீ எங்கிட்ட சொன்னா பிரச்சனை பெருசாகும்னு சொல்லவே இல்ல.நீ சொல்லாட்டி என்ன? நாம பரிஸ்டா போயிட்டு வந்த அன்னிக்கு அவன் என் வீட்டுக்கே வந்து என்னை மிரட்டிட்டு போயிட்டான்.அந்த கடுப்புல தான் அன்னிக்கு தண்ணி அடிச்சேன்.அதுக்கு அப்புறம் நீ தேவதை மாதிரி என் உயிர காப்பாத்தின.

அவனது குரல் உடைந்தது.அவனால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை.அவளே பேசினாள்

ஹரிதா:சரி கவலை படாத.இப்போ என்ன என்கிட்ட சொல்லிட்டேல. நீ சொன்ன மாதிரியே நான் வேலைய விட்டுடுறேன்.போதுமா?

அவள் குரலும் உடைந்து தான் போயிருந்தது

மணிசங்கர்:கதை இன்னும் முடியல ஹரிதா.

அவன் ஒரு இடைவெளி விட்டான்.இருவருமே பேசவில்லை.அமைதியின் மறுபக்கத்தை இருவரும் உணர்ந்தார்கள்.

மணிசங்கர்:நான் உன்னை பொய் சொல்லி லவ் பண்ணேன்.நீ என்ன பொய்யாவே லவ் பண்ண.ஏன் ஹரிதா?

அவள் விசும்பலை நிறுத்தினாள்.அவன் அழுகையை அடக்க முயன்று தோற்று போய் அழுது கொண்டே பேசத்தொடங்கினான்.

Tuesday, August 4, 2009

அன்று மழை பெய்தது -10

ஹலோ சார்.என்ன இந்த பக்கம்?
உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் மணிசங்கர்
சொல்லுங்க சார்
ஹரிதா என் ஆளு இனி என் விஷயத்துல தலையிடாதிங்க

மணிசங்கருக்கு சுர்ரென்று இருந்தது.

ஒழுங்கா ஓடிப்போயிடு மானெஜர் மயிறுனெல்லாம் பாக்கமாட்டேன் கொன்னேபோடுவேன்.
தப்பு பண்ற மணிசங்கர்.இதுக்கு வருத்தப்படுவ.
பொத்திட்டு போடா

மணிசங்கரை முறைத்துக்கொண்டே காரை எடுத்தான் தாமோதரன்.மணிசங்கருக்கு கோபத்தில் கை நடுங்கியது. நடுக்கத்துடன் சிகரெட்டை பற்ற வைத்தான்.அவனால் நம்பவே முடியவில்லை.அவன் வீட்டு வாசலில் வைத்தே அவன் காதலியை மறக்கும் படி அவனை மிரட்டி விட்டு செல்கிறான்.இதற்கு மேல் ஹரிதாவிடம் மறைத்து புண்ணியமில்லை.அவளுக்கு போன் செய்தான்.போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதாக தகவல் வந்தது.எரிச்சல் மேலும் அதிகமாகியது.டாஸ்மாக்கை நோக்கி வண்டியை விட்டான்.எல்லாம் வாங்கி விட்டு வீடு திரும்பிய போது மணி பத்தரை தொட்டிருந்தது.தனியே தண்ணியடிப்பதை இன்று வரை வரை சொர்க்கமென நினைத்தான் ஆனால் இன்று அதுவே அவனுக்கு நரகமாய் தெரிந்தது.அந்த மழை பெய்த இரவை மீண்டும் நினைத்துப்பார்த்தான்.இப்படியெல்லாம் கூட நடக்குமா?இத தான் விதினு சொல்லுவாங்களோ?பதில் வரும் முன் வாந்தி வந்தது.இன்று வழக்கத்தை விட போதை மிகவும் அதிகமாயிருந்தது. தட்டு தடுமாறி சென்று வாந்தி எடுத்தான்.வாந்தி சிவப்பாக இருந்தது.வயிறு எரியத்தொடங்கியது.தரையில் உட்கார்ந்தான்.போதை தெளிவது போல இருந்தது.மொபைல் சினுங்கியது.ஹரிதா தான்.பேச முயற்சித்தான்.ஆனால் நாக்கு குழறியது.

ஆம்புலன்ஸ் ஹரிதா வீடு ரத்தம்

போன் கட் ஆனது.தாமோதரன் பில்லி சூனியம் வைச்சிட்டான்.நினைவுகளும் பாதியில் கட் ஆக கண்களை மூடினான் மணிசங்கர்.
கண்களை திறந்த போது சுற்றிலும் வெள்ளையாக இருந்தது.சொர்க்கமாக இருக்கும் என்ற நினைப்பு தோன்றியது ஆனால் அவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற நினைப்பு எழவே சுற்றிப்பார்க்க முயற்சித்தான்.வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல நின்றுகொண்டிருந்தாள் ஹரிதா.இரவு முழுவதும் கண் உறங்கவில்லை என்பது அவளை பார்த்தாலே புரிந்தது.கேவலமாக திட்ட போகிறாள் என எதிர் பார்த்தான்.ஆனால் அவள் திட்டவில்லை.மெதுவாக அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

இனி குடிக்காத.ப்ளீஸ்.

அவனுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.அவளது கைகளை பற்றினான்.

மாட்டேன்.

மெலிதாய் சிரித்தாள் அவள்.

உங்க வீட்டுக்கு சொல்லிட்டேன்.
என்ன சொன்ன?
நீ டூப்ளிக்கெட் சாராயம் குடிச்சிட்டு ரத்த வாந்தி எடுத்தன்னு சொன்னேன்.

அவன் முழித்தான்.

முழிக்காத.புட் பாய்ஸனிங்க்னு சொல்லிருக்கேன்.உங்க அம்மா காலையிலேயே வந்திட்டாங்க. கேன்டீன் வரை போயிருக்காங்க.
நீ யாருனு கேட்டாங்களா?
ஃப்ரென்ட்னு சொல்லிருக்கேன்.
உண்மையவே சொல்லிருக்கலாம்.
சொல்றேன் சொல்றேன்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அம்மா அறைக்குள் நுழைந்தாள்.

சரி.நான் போயிட்டு வர்றேன்.ஆபிஸ்க்கு லேட் ஆயிடுச்சு.

அவனது அம்மாவிடமும் சொல்லிவிட்டு ஹரிதா கிளம்பினாள்.அவள் சென்றதும் தான் முந்தின இரவை பற்றிய நினைவுக்கு வந்தது.
அம்மா வந்து அவன் தலையை வருடிக்கொடுத்தாள்.உறக்கம் கண்ணைத்தொட்டது.அன்று பெரும்பாலும் உறக்கத்தில் கரைந்தது.
சாயங்காலம் ஹரிதா வந்தாள்.அம்மாவுக்கு அனேகமாக விஷயம் புரிந்திருக்க வேண்டும்.ஹரிதாவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவளே வெளியே சென்று விட்டாள்.

எப்படி இருக்க?
பரவாயில்ல.இன்னிக்கு வேலை எப்படி இருந்தது?
நீ சொன்னது இப்போ தான் கொஞ்சம் புரியுது
என்ன சொன்னேன்?
தாமோதரன்.
ஏன் எதுவும் தொல்லை குடுத்தானா?
இல்லை.ஒருத்தன் பார்வைய வைச்சே அவன் மனசுல என்ன ஓடுதுனு பொண்ணுங்களால கண்டுபிடிச்சுற முடியும்.

அவன் முந்தின இரவு நடந்தவற்றை அவளுக்கு விவரித்தான்.

நீ வேலைய விட்டுடு ஹரிதா.நானும் ட்ரான்ஸ்பர ஏத்துக்கிறேன்.அடுத்த வாரத்துல எங்க அப்பா அம்மா உங்க வீட்டுக்கு கல்யாணம் பேச வருவாங்க.உங்க வீட்ல எதுவும் பிரச்சனை இல்லையே?
எனக்கு ஓகேனா ஒரு பிரச்சனையும் இல்ல
ஏன் நீங்க என்ன சொல்ல போறிங்க?

அவள் கையை பற்றினான்.மொபைல் நழுவி கீழே விழுந்தது.

அய்யோ
ஒன்னும் இல்ல.மொபைல் எப்படி இருக்கு?
சூப்பர்
குடு பாப்போம்
நீ தான வாங்கி குடுத்த.நீயே பாக்கலியா?
குடு பாப்போம்
இந்தா.நீ பாத்திட்டு இரு.நான் போயி அத்தைய பாத்திட்டு வர்றேன்.
இப்போவே மாமியாரும் மருமகளும் கூட்டு சேர்ந்திட்டீங்களா?
போடா

அவள் மீண்டும் திரும்பிய போது அவன் உறங்கிக்கொண்டிருந்தான். மொபைலை எடுத்துக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவள் சென்றாள்.அவனால் ஆஸ்பத்திரியில் இருக்க முடியவில்லை.எப்போது தான் வெளியே விடுவார்கள் என ஆகிவிட்டது. ஹரிதாவுக்கும் தனக்கும் கல்யாணம் என்று சொல்லும் போது தாமோதரன் எப்படி முழிப்பான் என யோசித்துப்பார்த்தான். சிரிப்பு வந்தது. மருத்துவமனையில் அவன் போரடிப்பதாக சொல்லவே மறுநாள் ஹரிதா தனது லேப்டாப்பை கொண்டுவந்து கொடுத்தாள்.இரண்டு நாட்களில் அவனை டிஸ்சார்ஜ் செய்தார்கள்.அம்மாவும் ஊருக்கு கிளம்பினாள்.அவளை ரெயில் ஏற்றிவிட்டு வீடு திரும்பும் போது ஒம்பது மணி ஆகியிருந்தது.தாமோதரனுக்கு கூப்பிட்டான்.

ஹலோ சார்
நல்லா இருக்கீங்களா மணிசங்கர்?
ரொம்ப நல்லா இருக்கேன் சார்.நான் ட்ரான்ஸ்பர் எடுத்துக்குறேன் சார்.எப்போ அங்க ஜாய்ன் பண்ணனும்?
அடுத்த வாரம்
தேங்க் யூ சார்
நான் சொன்ன இன்னொரு விஷயத்த பத்தி யோசிச்சு பாத்தீங்களா?
முடிவே பண்ணிட்டேன் . நாளைக்கு காலையில நீங்களே தெரிஞ்சுகுவீங்க.
சரி மணிசங்கர்.பை

போன் கட் ஆனது.மணிசங்கர் ஹரிதாவின் மொபைலுக்கு அழைத்தான்.

எப்படி இருக்க டா?
நல்லா இருக்கேன்.
மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா?
ஆச்சு.
அத்தை ஊருக்கு கிளம்பிட்டாங்களா?
கிளம்பியாச்சு.
அப்புறம் சொல்லு
உனக்கு ஒரு கதை சொல்றேன் ஹரிதா.
இத்தனை நாளா கவிதை சொல்லி கொடுமைபடுத்தின.இப்போ கதையா? ஏண்டா?
இது உனக்கு புடிக்கும்
அப்படியா?சரி.கதை பேரு என்ன?
அன்று மழை பெய்தது

Friday, July 24, 2009

அன்று மழை பெய்தது - 9

வாங்க ஹரிதா.

மணிசங்கர் நீங்க உங்க கேபினுக்கு போகலாம்.

மணிசங்கர் அவனை முறைத்துக்கோண்டே வெளியேறினான்.ஹரிதா அப்பாவியாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.அவன் கேபினுக்கு செல்லவில்லை.கையில் நடுக்கம் தெரிந்தது.சிகரெட்டை எடுத்துக்கொண்டு கம்பெனியை விட்டு வெளியேறினான்.திரும்ப வந்த போது ஹரிதா அவனுக்காக காத்திருந்தாள்

என்ன ஆச்சு?
ஒன்னும் இல்ல.
தம் அடிச்சியா?

அவன் பதில் சொல்லவில்லை.காதலிகளிடமே உண்டான கெட்ட பழக்கம் இது.காதலிச்சா தம் அடிக்க கூடாது.தண்ணி அடிக்க கூடது.சைட் அடிக்க கூடாது.சுருக்கமா சொன்னா ஒரு ஆணியும் புடுங்க கூடாது.

என்ன பதில காணோம்?
டென்ஷன்.உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.
சொல்லு.

சாயங்காலம் பெசன்ட் நகர் பீச்சுக்கு போகலாம்

அவள் கல கலவென சிரித்தாள்.

இதுக்கு தான் இவ்ளோ டென்ஷனா?
இல்ல சாயங்காலம் சொல்றேன்.

அவளுக்காக பெசன்ட் நகர் கடற்கரை எதிரில் இருக்கும் பரிஸ்டாவில் காத்துக்கொண்டிருந்தான் மணிசங்கர்.இன்னும் கொஞ்ச நேரத்துல ஹரிதா வந்திருவா.அவ கிட்ட என்ன சொல்றது?எவ்ளோ சொல்றது என யோசித்துக்கொண்டிருந்தான்.அவன் முகத்தின் முன் கையை ஆட்டி அவன் சிந்தனையை கலைத்தாள் ஹரிதா.

என்ன ரொம்ப டல்லா இருக்க?
அதெல்லாம் இல்ல.
சும்மா சொல்லாத.காலையில் நான் உள்ள வந்தப்ப நீயும் மானேஜரும் ஏதோ சண்டை போட்டு கிட்டு இருந்த மாதிரி இருந்தது.
சண்டையெல்லாம் போடல. எனக்கு டிரான்ஸ்பர்.அடுத்த வாரத்துல இருந்து ஹெட் ஆபிஸ்.
என்ன திடீர்னு?
அவன் சரியில்லை ஹரிதா.
புரியல.யார சொல்ற?
தாமோதரன்.
இத்தனை நாளா ரவிகுமார திட்டிட்டு இருந்த.இப்போ இவரா?
அய்யோ உனக்கு புரியல.
உனக்கு தான் புரியல.ஹெட் ஆபிஸ் உனக்கு ப்ரோமோஷன் தானே?
வேலைல ப்ரோமோஷன கொடுத்துட்டு வாழ்க்கையில லே ஆஃப் கொடுக்க பாக்குறான்.
டையலாக் கேவலமா இருக்கு.

அவள் சிரித்தாள்.அவனுக்கும் அவளை கலவரப்படுத்த மனமில்லை.இன்னிக்கு
வேணாம் இன்னொரு நாள் சொல்லிக்கலாம்.

சரி அத விடு.
ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்ன?இது தானா?
இல்லை.
சரி அத சொல்லு.
ஐ லவ் யூ.

அவள் வாய் விட்டு சிரித்தாள்.இது தான் அவ கிட்ட அவனுக்கு ரொம்ப பிடிச்சது.
எந்த உணர்ச்சியையும் மறைக்காம அப்படியே வெளிய காட்டிடுவா. அவளுக்காக வாங்கி வைத்திருந்த மொபைலை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

என்ன இது?
ஒரு சின்ன கிஃப்ட்.
எதுக்கு?
சும்மா தான்.
சரி ஆனா ஒரு கண்டிஷன்.பர்த் டே க்கு வேற கிஃப்ட் தரனும்
கண்டிப்பா தர்றேன் போதுமா?
ஒகே.

அவள் மொபைலை எடுத்துக்கொண்டாள்.அவள் தெருமுனை வரை பேசிக்கொண்டே வந்தாள்.அவன் இப்போதே தலையாட்டி பழகத்தொடங்கினான்.

நிறுத்து.இங்கயே இறங்கிக்கிறேன்.
ஏன் வீட்டுலயே இறக்கி விடுறேனே?
எதுக்கு நான் வேலை பாக்குறது உனக்கு புடிக்கலயா?
கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கெல்லாம் போகக்கூடாது.
இவ்ளோ கண்டிஷன் போட்டா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி யோசிக்க வேண்டியிருக்கும்.
அடி.

செல்லமாக கோபித்துக்கொண்டு திரும்பினாள்.அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

ஒய்
என்ன?
உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன்.
என்ன?

அவள் ஹேன்ட் பேக்கை துழாவத்தொடங்கினாள்.

கண்ண மூடு குடுக்குறேன்.

தலையாட்டிக்கொண்டே கண்ணை மூடினான்.அவள் அவசரம் அவசரமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு விலகி நின்றாள்.அவன் திகைப்புடன் கண்ணை திறந்தான்.அவனை பார்த்து கண்ணடித்து விட்டு திரும்பி நடந்தாள்.

ஹரிதா
என்ன டா?
தாமோதரன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.நான் சொல்றது புரியுதுல்ல?
அய்யோ புரியுது.

அலட்சியமாக சொல்லி விட்டு அவள் ஏதோ பாடலை முனுமுனுத்த படி நடக்கத்தொடங்கினாள்.

முதல் காதல்.முதல் முத்தம்.முதல் சிகரெட். இது மூன்றையும் ஒரு மனிதனால் எப்போதும் மறக்க முடியாது.அவை ஆசிர்வதிக்கப்பட்ட தருணங்கள்.அவள் வீடு போகும் வரை நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
கிளம்புவதற்கு முன் தெருவை சுற்றி நோட்டம் விட்டான்.

யாருக்கு தெரியும் அந்த தாமோதரன் ****** இங்க தான் எங்கயாச்சும் சுத்திட்டு இருப்பான்.

அதே யோசனையுடன் வீடு திரும்பினான் மணிசங்கர்.அவன் வீட்டு வாசலில் தாமோதரன் நின்று கொண்டிருந்தான்.

Wednesday, July 22, 2009

அன்று மழை பெய்தது-8

ஹரிதாவை பத்தி நினைக்குற நேரத்த விட தாமோதரனை பத்தி நினைக்குற நேரம் தான் அவனுக்கு அதிகமா தெரிஞ்சது. காதல் பேசி அழைத்தது. பேச்சுவாக்கில் ஹரிதாவிடம் கேட்டான்.

புது மானேஜர் எப்படி?
பரவாயில்ல

இன்னும் பையன் வேலைய ஆரம்பிக்கல போல என நினைத்துக்கொண்டான்.

சரி ஷாப்பிங் போனும்னு சொன்ன?எத்தன மணிக்கு?
நீ தான் வரலைனு சொல்லிட்டல்ல.அப்புறம் என்ன?
சும்மா தான்.என்ன திடீர் ஷாப்பிங்?
அடுத்த வாரம் எனக்கு பிறந்த நாள் வருது.அதான் ட்ரெஸ் எடுக்க போறேன்.
சரி.எங்க போற?
ஸ்பென்சர்.லேட் ஆகுது.நான் போயிட்டு வந்து கூப்பிடுறேன்.பை.
பை

ஒரு வழியாக அவள் ஷாப்பிங் முடித்த போது மணி 9.30 ஆகிவிட்டிருந்த்து.
உடலில் சோர்வு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தாள்.சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகலாமா இல்லை வீட்டுக்கு போய் சாப்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தபோது தான் அவனை கண்டாள்.கையில் யுனிவெர்செல் கவர்.
அவனை பார்த்ததும் அவளுக்கு கோபம் தான் வந்தது.அவன் எண்ணை மொபைலில் அழுத்தினாள்.

ஹலோ
எங்க டா இருக்க?
என்ன மரியாதை குறையுது?நான் வெளிய இருக்கேன்.
நானும் அதே வெளிய தான் இருக்கேன்.ரைட்ல திரும்பி பாரு.

அசடு வழிந்த படி திரும்பினான் மணிசங்கர்.

இங்க என்ன பண்ற?ஸ்பென்சர் தானே போறேன்னு சொன்ன?
என் கூட ஷாப்பிங் வர மாட்டேன்னு சொல்லிட்டு சிட்டி சென்டர்ல உனக்கு என்ன வேலை?
போலியாய் முகத்தில் கோபம் காட்டினாள் அவள்.அவள் எத்தனை அழகு என அப்போது தான் அவன் முழுதாய் உணர்ந்தான்.
சும்மா தான் வந்தேன்.
மொபைல் புதுசா?குடு பாப்போம்
இது ரொம்ப வேண்டியவங்களுக்கான பிறந்த நாள் பரிசு.வேற யார் கிட்டவும் காட்ட முடியாது.
அது சரி.
அவள் சட்டென சிரித்தாள் அவன் அதில் தொலைந்தான்.

ஹேய் அங்க பாரு நம்ம புது மானேஜர்

சட்டென அவன் முகம் கறுத்தது

எங்க?
அதோ பழமுதிர்ச்சோலைல பாரு
சரி வா நாம கிளம்புவோம்.மணி 10 ஆச்சு
சரி.

ஹரிதாவுடன் கை கோர்த்த படி நடக்க ஆரம்பித்தான் மணிசங்கர்.பத்தடி நடந்திருப்பான்.திடீரென திரும்பி தாமோதரன் பக்கம் திரும்பினான்.தாமோதரன் ஹரிதாவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அது வரை கண்களில் இருந்த காமம் மணிசங்கர் பக்கம் திரும்பியதும் வெறியாக மாறியது.மணிசங்கர் அவள் கைகளை அழுத்திப்பிடித்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை.தாமோதரனின் முகம் தான் நிழலாடிக்கொண்டிருந்தது.மறுநாள் அலுவலகம் நுழைந்ததும் தாமோதரனால் அழைக்கப்பட்டான்

குட் மார்னிங் மிஸ்டர் மணிசங்கர்
குட் மார்னிங் சார்
உங்களை ஹெட் ஆபிஸ்க்கு மாத்தலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.அடுத்த மாசத்துல இருந்து உங்களுக்கு 3,000 இன்க்ரிமென்ட்.கங்கிராட்ஸ்

கை குலுக்க நீட்டினான் தாமோதரன்

தேங்க் யூ சார்

தயக்கத்துடன் கைகுலுக்கி விட்டு கிளம்பினான் .அறைக்கதவை திறக்கும் போது அவனை தாமோதரன் கூப்பிட்டான்.

மணிசங்கர்
என்ன சார்?
அப்படியே போகும் போது ஹரிதாவை வரச்சொல்ல முடியுமா?

மணிசங்கருக்கு சுள்ளென்று ஏறியது அப்படியே தாமோதரன் பக்கம் திரும்பினான்.

எதுக்கு சார்?

இருவரும் ஒருவரை ஒருவர் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அறைக்கதவை யாரோ தட்டுவது போல இருந்தது.இருவரும் திரும்பினார்கள்.

எக்ஸ்க்யூஸ் மீ

ஹரிதா எட்டிப்பார்த்தாள்.

Wednesday, July 8, 2009

அன்று மழை பெய்தது-7

யாரும் கவனிக்காதவாறு ஒரமாக சென்று அமர்ந்தான் மணிசங்கர்.தாமோதரன் பேசத்தொடங்கினார்.

வணக்கம்

மைக்கை தட்டிப்பார்த்தான்.உங்களை சந்திக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.என் பெயர் தாமோதரன்.நான் தான் உங்க புது ப்ராஜக்ட் மானேஜர்.அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க சரியா பண்ணாலே போதும் எல்லாம் நல்ல படியா போகும்.நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.எல்லோரும் போய் வேலைய பாருங்க.

மணிசங்கரால் நம்பவே முடியவில்லை.அன்னிக்கு அந்த பம்பு பம்புனானே அவனா இவன்?அவன் சிந்தனையை கலைக்க செல்போன் அலறியது.எடுத்து பார்த்தான் ஹரிதா மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

சென்னை வந்தாகிவிட்டது.மதியம் சந்திப்போம்.

விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டான் மணிசங்கர்.அடுத்து என்ன நடக்கும்னு அவனால நெனைச்சு கூட பார்க்க முடியவில்லை.ஒரு வேலை ஹரிதாவ அடையாளம் கண்டு பிடிச்சுருவானோ?கண்டுபிடிச்சா என்ன?அவளுக்கு தான் இவனை தெரியாதே.அவசரப்பட்டு எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு நாமளே காட்டி கொடுத்த கதையாகிட கூடாது.மதியம் நிலவரத்த பாப்போம்.காலண்டரில் பார்த்தான்.1.30-2.30 ராகு காலம்.மதியம் நெருங்கியது.வழி மேல் விழி வைத்து ஹரிதாவுக்காக காத்திருந்தான் மணிசங்கர்.

சரியாக 1.35க்கு வந்து சேர்ந்தாள் ஹரிதா.அவனை பார்த்ததும் அவள் வாயில் இருந்து வந்த முதல் வார்த்தை

கங்கிராட்ஸ்.சாதிச்சு காட்டிட்ட போல
நீ என்ன சொல்ற?
உதட்டில் போலிப்புன்னகையை ஏந்தினாலும் முகத்தில் பதட்டம் அவனை காட்டி கொடுத்தது
ஒரு வழியா ரவிக்குமார ஓடவிட்டுட்ட.புது மானேஜர் எப்படி?
இனிமே தான் தெரியும்
கவலை படாத.நல்லவனா தான் இருப்பான்.
இருந்தா பரவாயில்ல.
சரி நான் போயி பாத்திட்டு வர்றேன்
ஆல் த பெஸ்ட்

அவளுக்கு அவனை பார்க்கையில் சிரிப்பு வந்தது

நான் என்ன பரீட்சைக்கா போறேன்?
இருக்கலாம்

இன்னிக்கு உனக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு. நான் வர்றேன்.
அவள் சிரித்துக்கொண்டே தாமோதரன் அறையை நோக்கி நடந்தாள்.பைத்தியம் இன்னிக்கு தான் பிடிச்சிருக்கா?மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் மணிசங்கர்.இன்னும் அஞ்சு நிமிஷம் தான்.பொறுத்துக்கோ.எப்போது தாமோதரனின் அறைக்கதவு திறக்கும்?எப்போது ஹரிதா வெளியே வருவாள்?

கம்பெனியை விட்டு வெளியே வந்து சிகரெட்டை பற்ற வைத்தான்.
அவன் மீண்டும் உள்ளே செல்லும் போது ஹரிதா அவள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்போவே போய் கேட்டா ஒரு வேளை சந்தேகப்படுவாளோனு அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது அதுனால அவளா வந்து சொன்னா கேட்கலாம்னு அவன் வேலையை பார்க்க போனான்.ஆனால் வேலையில் மனம் இறங்கவில்லை.எட்டி அவளைப்பார்த்தான்.அவள் அமைதியாக வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.ஒன்னும் நடக்கல. தாமோதரனுக்கு அவளை ஞாபகம் இல்லை போல.ஞாபகம் இருந்தா ஹரிதாவை கேட்டிருப்பான் அவன் கேட்டிருந்தா அவ நம்ம கிட்ட சொல்லி இருப்பா.நிம்மதி பெருமூச்செறிந்தான் மணிசங்கர்.

மனித மனம் குரங்கு போல கிளைக்கு கிளை தாவிச்செல்லும் என்பது தான் எத்தனை உண்மை?இந்த குரங்கும் கிளை தாவியது.ஒரு வேளை அவனும் பொறுமையா டீல் பண்றானா?இல்லை எனக்கு தான் இப்படி தோணுது.யாருக்கும் யாரையும் தெரியாது.எதுக்கும் போய் அவன் என்ன பண்ணிட்டு இருக்கிறான்னு பாத்திட்டு வந்திடலாம்.

ஒரு ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு தாமோதரனது அறைக்குள் நுழைந்தான் மணிசங்கர்.தாமோதரனது முகம் கொஞ்சம் சுருங்கி போய்த்தான் இருந்தது.அது இது என்று ஒரு பத்து நிமிடம் அவனிடம் மொக்கையை போட்டுவிட்டு கிளம்பினான் மணிசங்கர்.அறைக்கதவை திறக்கும் போது அவனை தாமோதரன் கூப்பிட்டான்.

மணிசங்கர்
என்ன சார்?
மிஸ் ஹரிதாவை வரச்சொல்ல முடியுமா?

எதுக்கு?தொண்டை வரை வந்த வார்த்தைகளை முழுங்கினான் மணிசங்கர்.

சொல்லிடுறேன் சார்.

Friday, June 26, 2009

அன்று மழை பெய்தது-6

காரணமில்லாமல் வரும் காதலில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
1.அவள் அழகாக இருக்கிறாள்
2.குழந்தை தனமான பேச்சு
3.நல்ல பொண்ணு
இத்தனை காரணம் போதாதா காதல் வருவதற்ககு?மணிசங்கருக்கு காதல் வந்தது.

காதலில் வெற்றி பெறுவதெற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன அதை மதித்து நடந்தாலே போதும் பாதி கிணறு தாண்டின மாதிரி.அவனும் அவற்றை மதித்தான்.

முதல்ல ரொம்ப ஃப்ரண்ட்லியா பழகனும்.அப்புறம் ரொம்ப கேர் எடுத்துக்கனும்.இத்தனை வருஷம் அப்பா அம்மா காட்டின பாசத்த ஆறு மாசத்துல நம்ம முறியடிக்கனும்.ஆனா அதுக்கு அவசியம் இல்ல ஏன்னா அவ அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க அதுனால அவங்க கூட அவளுக்கு அட்டாச்மென்ட் கம்மி தான்.இப்படி எத்தனயோ பேரு முயற்சி பண்ணி வெற்றி பெற்ற பாதையில் அவனும் பயணிக்க தொடங்கினான்.

இத்தனை வருடங்களாக அன்புக்கு ஏங்கிய மனது.மூன்றே மாதத்தில் அவளே காதலை வெளிப்படுத்தினாள். நேரம் காலம் கூடி வருகிறது.அவன் ஆனந்த கூத்தாடினான். எது நடந்தாலும் ஒரு காரணத்தோட தான் நடக்குங்ற அவனோட மனப்போக்கை அவள் மாற்றினாள்.அவளோடு இருக்கும் தருணங்கள் அவனுக்கே அவனை புதிதாய் அறிமுகப்படுத்தின.

இந்த நிமிஷம் அவளை நான் நெனைச்சிட்டு இருக்கேன்னு அவளுக்கு தெரியுமா?நானா இதெல்லாம் யோசிக்கிறேன்? இதெல்லாம் தான் இப்போ அவன் அடிக்கடி அவனா யோசிச்சு பாத்து அவனா சிரிச்சுக்குற விஷயங்கள்.காதலை புரிய வைத்ததால் ஹரிதாவுக்கு நன்றி ஹரிதாவை தந்ததால் காதலுக்கு நன்றி.
அவனோட ப்ராஜக்ட் மானேஜர் ரவிக்குமாரை மட்டும் அவன் வாழ்க்கையில் இருந்து தனியாக எடுத்து வைத்து விட்டு பார்த்தால் இது தான் சொர்க்கம்னு கூட அவன் சொல்லிடுவான்.எல்லாம் கூடி வர்ர மாதிரி இந்த ஆளும் எங்கயாவது போயிட மாட்டானான்னு அவனுக்கு ஒரு நப்பாசை.

ஹரிதா முன்னாடி அந்த ஆள் கிட்ட திட்டு வாங்க அவனுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனாஅவ இதெல்லாம் கண்டுக்கிற ரகம் இல்லை தான். நேரம் வரட்டும் இந்த ஆளுக்கு முதல்ல ஆப்பு வைக்கனும்.கழுதைக்கு வாக்கப்பட்டா பொதி சுமந்து தான் ஆகனுங்றது எவ்வளவு சரியா இருக்கு?
அடுத்த நாள் அலுவலகத்துக்கு போனவனுக்கு இன்ப அதிர்ச்சி.ப்ராஜக்ட் விஷயங்களை வேற ஒரு ஏஜன்ட் கிட்ட விற்க போயி கையும் களவுமா மாட்டிகிட்டார் ரவிக்குமார்.இந்த சந்தோஷத்தை பகிர்ந்துக்க ஹரிதா இல்லை.அவ சொந்த ஊருக்கு போயிருக்கா.நிஜமாகவே தனது அதிர்ஷ்டத்தை நினைத்து வியந்து கொண்டான்.புது மானேஜர் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்தார்.அரை மணி நேரத்தில் ஊழியர்கள் அனைவரையும் கான்பெரன்ஸ் ஹாலுக்கு அழைத்தார்.தனது அதிர்ஷ்டத்தின் மேல் மொத்த பாரத்தையும் போட்டு விட்டு மணிசங்கரும் அறைக்குள் நுழைந்தான்.அங்கே
புது மானேஜர் தாமோதரன் உட்கார்ந்திருந்தார்.

அவன் மண்டைக்குள் ஒரு குரல் கேட்டது"எல்லாத்துக்கும் நேரம் காலம் கூடி வரனும்".

Wednesday, June 24, 2009

அன்று மழை பெய்தது-5

போகும் போது இருந்த உற்சாகம் மகிழ்ச்சி எல்லாம் மறைந்து சோர்ந்து போய் வீடு திரும்பினான் மணிசங்கர்.ஹரிதாவையும் அவனையும் ஒரே குழுவில் வேறு போட்டுவிட்டார்கள்.காலையில நேரம் காலம் கூடி வந்திருச்சுனு சந்தோஷப்பட்டவன் சாயங்காலம் விதி வலியதுனு நொந்து போயிருந்தான்.

அறை வாசலிலே காத்திருந்தான் சம்பத்.அவனது அறைக்கூட்டாளி.மணிசங்கரின் ட்ரீட்காக ஆபிசில் இருந்து அரை மணி நேரம் முன்னதாகாவே வந்து காத்துக்கொண்டிருந்தான்.

டேய் எவ்ளோ நேரம் டா உனக்கு வெயிட் பண்றது?இப்போலாம் பத்து மணிக்கெல்லாம் பார மூடிர்ரானுங்க.

அவனை ஷூ கலட்ட கூட விடாமல் அப்படியே பாருக்கு இழுத்து சென்றான் சம்பத் .

சந்தோஷமோ வருத்தமோ ஒரு குவார்ட்டர உள்ள தள்ளியாச்சுனா மனசு விட்டு பேசிடுவான்.இப்போ மனசுல சந்தோஷமும் இல்ல வருத்தமும் இல்ல குற்ற உணர்ச்சி தான் இருக்குது.எதுவுமே பேசாமல் கப் கப்பென்று அடித்து விட்டு மட்டயாகினான் மணிசங்கர்.சம்பத்தும் வந்ததுக்கு வஞ்சனை வைக்காம நல்லாவே அடிச்சிட்டான்.ஒருத்தர் தோள்ல ஒருத்தர் சாஞ்சு பாட்டு பாடிகிட்டே
ஒரு வழியா வீடு போயி சேர்ந்தானுங்க ரெண்டு பேரும்.

அர்த்தமில்லாத கனவுகளும் நடு நடுவே சம்பதின் உளரல்களும் எப்போது தான் இந்த ராத்திரி முடியும்னு ஆகிப்போச்சு அவனுக்கு.காலையில எழுந்ததும் தலை வழி வேற.இந்த எழவுக்கு தான் ஹாட் அடிக்க வேணாங்றது.சனியன் சாயங்காலம் வரை தலை வலிக்குமே.ஆபிஸ் போனா அது வேற இருக்கும்.
தனது சர்வ லோக வலி நிவாரனியை(சிகரெட்) எடுத்தான்.

பாதி தம் முடிந்த போது தான் அவனுக்கு அது தோன்றியது.அப்படி என்ன தப்பு நான் பண்ணிட்டேன்?அவளுக்கே தெரியாம அவள ஒருத்தனுக்கு உதவி பண்ண வைச்சுருக்கேன்.நல்ல விஷயம் தான.இதுனால யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லயே.பாவம் தாமோதரன்.யாரு பெத்த பிள்ளையோ?அதுக்கு தான் 100 ரூபாய் நஷ்டம்.சரி நம்ம வேலைய பாப்போம்.உற்சாகமாக கிளம்பினான் மணிசங்கர்.
இன்றும் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள் ஹரிதா.இன்று அவனே ஆரம்பித்தான்.

ஹலோ

அவ்வளவு தான்.அதுக்கு அப்புறம் அவ நிறுத்தவே இல்ல.சரியான வாயடி.ஆனா
அவ பேசுனப்ப பொழுது போனதே அவனுக்கு தெரியல.

திடீரென்று சம்பந்தமே இல்லாமல் நீங்க ஏன் இந்த சூப்பர் சிங்கர் மாதிரி எதாவது
ட்ரை பண்ணக்கூடாது என்று கேட்டாள்.அவன் முழித்தான்.

நேத்து நைட் பாட்டு சூப்பர்.கேட்டுட்டு ராத்திரி பூரா தூக்கமே வரல.தெரியுமா?

என்ன பாட்டு?

ஹலோ நானும் உங்க ஏரியா தான்.

ஒரு வழியாக சிரித்து சமாளித்தான்.இன்னிக்கு வேலை முடிஞ்சு கொஞ்சம் சந்தோஷமாகவே கிளம்பினான்.யாரோ கூப்பிட்டது போல இருந்தது.திரும்பி பார்த்தான்.ஹரிதா நின்று கொண்டிருந்தாள்.

மணிசங்கர் உங்களுக்கு டபுள்ஸ் ஓட்டத் தெரியுமா?

பதிலுக்கு காத்திராமல் வந்து அவளே பின்னாடி ஏறிக்கொண்டாள். கண்ணாடியில் அவள் முகம் பார்த்தான் அவன்.

Monday, June 22, 2009

அன்று மழை பெய்தது-4

திட்டத்தின் இரண்டாவது கட்டம்.இப்போ தான் ஜாக்கிரதையா இருக்கனும்.

ஹலோ நான் ஹரிதா

பெண் குரலில் பேசிப்பார்த்து கொண்டான்.ரெண்டு நிமிஷம் பொண்ணு மாதிரி பேசனும்.அடுத்து ஹரிதாவோட அண்ணன் மாதிரி பேசி அவனை மிரட்டி விட்டுடனும்.கண்களை மூடி சிகரட்டை இழுத்தான்.புகையை ஊதிய படி அக்செப்ட் (accept) பட்டனை அழுத்தினான்.

ஹரிதா:ஹலோ
தாமோ:ஹலோ ஹரிதா நான் தாமோ பேசறேன்
ஹரிதா:சொல்லுங்க தாமோ

ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு முறை சிகரட்டை இழுத்து கொண்டான் மணிசங்கர்.

தாமோ:என்ன பண்ணிடு இருக்க?
ஹரிதா:படம் பாத்துட்டு இருக்கேன்
தாமோ:என்ன படம்?
ஹரிதா:யாரடி நீ மோகினி?
தாமோ:அய்யோ எனக்கும் ரொம்ப பிடிக்கும்
ஹரிதா:நான் அப்புறம் கூப்பிடுறேன்.யாரோ வர்ர மாதிரி இருக்கு.வீட்ல யாரச்சும் பாத்தா நான் அவ்ளோ தான்
தாமோ:ஹேய் ஹேய்

ம்ம்.இது தான் நேரம்.ஹரிதாவோட அண்ணனை உள்ளே கொண்டு வந்திட வேண்டியது தான்.

ஹரிதா:அண்ணா

தாமோ:நான்

மணிசங்கர்:இனி போனை கையில தொட்ட வெட்டிருவேன்.என்ன திமிரு டீ உனக்கு.

ஹரிதா:அண்ணா

மனிசங்கர்:யாரு டீ அவன்?சொல்லு அவனை பொளந்துட்டு வந்து உன்னை பாத்துக்றேன்.

எதிர் முனையில் போன் கட் ஆனது.

கண்களை மூடி பெரு மூச்சு விட்டான் மணிசங்கர்.கையில் சிகரெட் சுட்டது.மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.ஹரிதாவின் ஆர்க்குட் அக்கௌன்டை திறந்தான்.சொல்லாமல் கொள்ளாமல் தாமோதரன் அவளது நன்பர்கள் குழுவில் இருந்து ஓடி போயிருந்தான்.இவ்ளோ பயம் இருக்க இவனெல்லாம் ஏன் தான் கடலை போட ஆசை படுறானோ என்று நினைது கொண்டே அப்பாவிற்க்கு போன் செய்தான்.

இரண்டு மாதங்கள் கழித்து(வெயில் காலம்)...........

நேரம் காலம் கூடி வரும்னு சொல்றது எவ்ளோ பெரிய உண்மைனு அப்போ தான் மணிசங்கருக்கு புரிந்தது.ஒரு வேளை வேலையெ கிடைக்காம போயிடுமோனு அவன் பயப்பட ஆரம்பிச்ச காலகட்டம் அது.அவனே எதிர்பார்க்காமல் தான் அந்த வேலை அவனுக்கு கிடைத்தது.பெரிய ஐ.டி கம்பெனி.முதல் இரண்டு மாதம் ட்ரெயினிங்.மாதம் இருபதாயிரம் சம்பளம்.ச்ச உனக்கு வந்த வாழ்வை பாரு டா மணிசங்கர்.அவனை அவனே மெச்சி கொண்டான்.

ரிஷஷன்(recession) லே ஆப் அது இதுனு என் வேலைய புடிங்கிடாத கடவுளே.எனக்கு வேலை கொடுக்க இன்னொரு மாங்கா மண்டயன் கிடைக்க மாட்டான்.கடவுளை வேண்டிக்கொண்டே முதல் நாள் அலுவலகத்துக்கு சென்றான் மணிசங்கர்.அவனுடன் சேர்த்து மொத்தம் 60 பேர் தேர்ந்தெடுக்கபட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் செமினார் ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர்.அங்கு தான் அவர்களுக்கு வகுப்பு.மணிசங்கர் மும்மரமாக செல்லில் கேம் ஆடிக்கொண்டிருந்தான்.அவன் பக்கத்தில் யாரோ உட்காருவது தெரிந்தது. மெதுவாக தலையை திருப்பினான்.பக்கதில் ஒரு பெண்.அதுவும் பிப்பா.அவள் கை நீட்டினாள்.

பெண்:ஹாய்

இவளை எங்கயோ பாத்திருக்கொமே

மணிசங்கர்:ஹாய்
பெண்:நான் ஹரிதா.ஹரிதா ராமச்சந்திரன்

அதற்க்குள்அறைக்குள் அவர்களது மேலதிகாரி நுழைய எல்லோரும் எழுந்தார்கள்.வியர்வையை துடைத்தபடி மணிசங்கரும் எழுந்தான்.


Saturday, June 20, 2009

அன்று மழை பெய்தது-3

வெறுப்புடன் கம்ப்யூட்டரில் மெயில் செக் பண்ணத்தொடங்கினான். முதல் மெயில் ஆர்க்குட்டில் இருந்து வந்திருந்தது.

email:r.haritha.86@gmail.com
password:haritharamachandran

அவன் போஸ்ட் பண்ணி இருந்த ஏதோ ஒரு லிங்க்க க்ளிக் பண்ணியிருக்கா. தனக்குள் சிரித்துக்கொண்டான். ஒரு க்ளிக்கில் தங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வார்ட் வேறு ஒருவருக்கு போய் விடும் என யாரும் எதிர் பார்ப்பதில்லை தான் ஆனால் அவ்வளவாக இன்டெர் நெட் பற்றி தெரியாத என்னாலயே இவ்ளோ ஈசியா கண்டு பிடிக்க முடியுதுனா விஷயம் தெரிஞ்சவன் என்னென்ன பண்ணுவான் என்று நினைத்து பார்த்தான்.மூளையின் மூலையில் ஒரு திட்டம் உதயமானது.

ஹரிதாஅக்கௌன்ட் மூலமா ஏதாவது ஒரு சாட்(chat) ரூமில் நுழைந்து ஏதாவது ஒரு டாமா கோழிய அமுக்கி அவன ரீ-சார்ஜ் பண்ண வெச்சுட வேண்டியது தான்.
சாட்டிங்கில் நுழைந்த இரண்டாவது நிமிடத்தில் சிக்கியது டாமா கோழி. கோழியின் பெயர் தாமோதரன்.

CHAT HISTORY:

DAMODARN-->Devil's re-incarnation invites haritha ramachandran to chat

Damo:hiiiiiii..,,
haritha:hai
Damo:how r u??
haritha:fine.how r u?
Damo:me too..,,wat r u doing??

மணிசங்கர்:லூசுப்பைய ப்ரொபைல் பாத்து தெரிஞ்சுக்கமாட்டான்.இத கூட நம்ம தான் பாத்து சொல்லனும்.

haritha:check my profile to know abt me
Damo:sure haritha..,,u seems like a intresting person..,,
haritha:is it so?thank u
Damo:do u have a mic??
haritha:no
Damo:mobile?

மணிசங்கர்:ஒரு வழியா விஷயத்துக்கு வந்துட்டான்யா

haritha:yeah
Damo:shall v talk now??
haritha:sorry.i don't have validity
Damo:k then temme ur no..,,i'll recharge 4 u..,,

மணிசங்கர்:கொஞ்சம் பிகு பண்ணி தான் குடுக்கனும். அப்போ தான் பிகருனு நம்புவான்.எது சொன்னலும் நம்புறானே

haritha:its ok.i'll call u tomorrow
Damo:hey if u think me as ur frnd then tell me..,,
haritha:k.98945*****
Damo:k.i got it...,,call u in few min..,,
haritha:k thank u.ur num?
Damo:no thanks b/w frnds..,,ok va?99620*****
haritha:k
Damo:bye..,,catch up wid u soon in mob..,,
haritha:bye

Damo signed out.

மணிசங்கரால் நம்பவே முடியல.இவ்ளோ ஈசியா ஏமந்துட்டானே.வாழ்க ஹரிதா ராமச்சந்திரன்.வளர்க தாமோதரன்.

உலகமே நாடக மேடை
அதில் நடிகன் தானே தேவை..செல் போன் சிணுங்கத்தொடங்கியது.எடுத்து பார்த்தான்.தாமோதரன் காலிங்.



Thursday, June 18, 2009

அன்று மழை பெய்தது-2

செலவு கணக்கை சரி பார்க்க தொடங்கினான்.

mc half-140.00
water pocket-10.00
dum-39.00
pickle-5.00
kadalai mittai-5.00

total-199.00
balance-1.00

அப்பாவிடம் ரூபாய் அனுப்ப சொல்லனும்.மொபைல்ல பேலன்ஸ் பார்த்தான்.30 ரூபாய் 25 பைசா இருந்தது.மணி 10.30 ஆகுது.காலையில சொல்லிக்கலாம்.

சொர்க்கம் மதுவிலே ஆரம்பித்தது

எப்போது?எப்படி தூங்கினான் என்பது அவனுக்கே தெரியவில்லை.எழுந்து பார்த்த போது வியர்வையில் குளித்திருந்தான்.கரன்ட் இல்லை.சுற்றி இருந்த இருள் இன்னும் விடிய வில்லை என அவனுக்கு உணர்த்தியது.சற்று தள்ளி தரையில் கிடந்த செல் போனில் அலாரம் அடித்து கொண்டிருந்தது.எடுத்து பார்த்தான் ஆஃப் ஆகியது.தள்ளாடி எழுந்து சென்று கதவை திறந்தான் மழை கொட்டி கொண்டிருந்தது.அப்படியே கீழே விழுந்தான்.
தட் தட் தட்

மழை நீர் அவனது முகத்தில் தெறித்துக்கொண்டிருந்தது.செத்த பிணத்திற்கு உயிர் வந்தாற்போல திடீரென்று துள்ளி எழுந்தான்.கரண்ட் வந்திருந்தது.சார்ஜ் போட்டு விட்டு மொபைலை ஆன் செய்தான்.காலர் ட்யூனுக்கு மாத வாடகை 30 ரூபாயை எடுத்துட்டானுங்க.பரதேசி நெட்வொர்க்.

கையில் 1 ரூபாய் மொபைலில் 25 பைசா,கூட யாரும் இல்ல .எப்படி அப்பாவ பணம் போட்டு விட சொல்றது?தலையில் கை வைத்த படி வெளியே பார்த்தான்.
இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது.

Saturday, June 13, 2009

அன்று மழை பெய்தது-1

இடம்: பள்ளிக்கரணை(சென்னை)
மழை காலம்


தெருவெங்கும் இருள் வழிந்தோடி கொண்டிருந்தது. மளிகை கடையை பூட்டி கொண்டிருந்தார் அண்ணாச்சி.

அண்ணா ஒரு பாக்கெட் கிங்க்ஸ்
நாற்பது ருபாயை கொடுத்தான் மணிசங்கர்

பாக்கெட் நாப்பத்தஞ்சு ரூபாய்
எப்போ இருந்து?
இன்னிக்கு தான் கூட்டிருக்கு
அப்பொ 9 கிங்க்ஸ் 1 ஃபில்டெர் கொடுங்க
பர்ஸை எடுத்து பார்த்தான் மிச்சம் 1 ரூபாய் இருந்தது.ம்ம்.சென்னைக்கு போனா வேலை கிடைக்கும்னு நம்பி வருஷா வருஷம் சென்னை வரும் ஆயிரக்கணக்கானோரில் மணிசங்கரும் ஒருவன்.பழைய படங்களில் வரும் வேலை இல்லா பட்டதாரிகளை போல சாப்பாடுக்கு கஷ்டப் படும் நிலையில் அவன் இல்லை.மாதா மாதம் முதல் வாரத்தில் சம்பளம் போல ஆறாயிரமோ ஏழயிரமோ அவனது அப்பா அனுப்பி விடுவார்.
தனியே தண்ணி அடிப்பது ஒரு சுகம்.யாரோட புலம்பலயும் கேட்க வேணாம்.மெதுவா ஒவ்வொரு பெக்கா போட்டு கிட்டே ராஜா பாட்டு கேட்டா அது தான் சொர்க்கம். நண்பர்கள் இருவரும் ஊருக்கு போய் விட்டதால் மணிசங்கரும் சொர்க்கத்துக்கு போக தான் ரெடி ஆகி கொண்டிருந்தான். வீட்டை நெருங்கும் போது குளிர்க்காற்று அவனை அரவணைத்தது போல இருந்தது.கதவை திறக்கும் போது ஒரு துளி நீர் கையில் விழுந்தது.இன்னிக்கு மழை பெய்யும் என்று நினைத்த படி வானத்தை அண்ணாந்து பார்த்தான்.இடி இடித்தது.