Monday, September 5, 2011

காலன் காலிங்-1

கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போகும் போது டிரைவரை கூட்டிட்டு வரப்போறியா இல்லை என்னை ஓட்டச்சொல்லபோறியா?

மலேசியாவுக்கு கார்ல போகமுடியாது டார்லிங்.

உன்னை கார் ஓட்ட சொல்லக்கூடாதுனு தானே மலேசியா போகலாம்னு சொல்ற?

பெருத்த அவமானம். இன்னும் ரெண்டு மாசத்துல நல்லா கார் ஓட்டி ஓட்டுனர் உரிமம் எடுத்து உன்னை ஒரு ரொமண்டிக் ட்ரைவ் கூட்டிட்டு போகலைனா...

போகலைனா?

நீ என்னை கூட்டிட்டு போ

தூ

என்ன வாய்க்குள்ள கொசு போயிருச்சா?

மொக்கை. நான் நூலகத்துக்கு போறேன் அப்புறம் போன் பண்றேன்

ஓகே டார்லிங் .பை

கார் ஓட்டத்தெரியாம இருக்கிறது ஒரு குற்றமா? இவ்வளவு நேரமா என் கிட்ட பேசிக்கொண்டிருந்தது என் டார்லிங் மதுமிதா. கோவை அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மென்பொருள் தொழில்நுட்பம் படிக்கிறாள். கவிஞர்கள் பாஷை வராத காரணத்தால் என் சொந்த வர்ணிப்பில் அவ"செம ஹோம்லியான பிகரு". நானும் அதே கல்லூரி அதே ஆண்டு தான் ஆனால் துறை மட்டும் இயந்திரவியல். முதல் வருடமே உன் நம்பர் கேட்டு சீனியர்கள் ராகிங் செய்கிறார்கள் என்று கெஞ்சி வாங்கி அது அந்த வீணாப்போன சீனியர்களுக்கு தெரிந்து உண்மையிலே நம்பர் கொடுக்கும்படி என்னை டார்ச்சர் செய்து "அடிச்சும் கேப்பாய்ங்க சொல்லிறாத"னு நாலு அடியையும் தாங்கி , ச்சே பயபுள்ள நமக்காக அடி வாங்குறானேனு அவளும் உருகி அப்படி தான் என் காதல் பயணம் தொடங்கியது. இந்த கார் ஓட்டுற ஒரு விஷயத்த தவிர மிச்ச எல்லாத்துலயும் நாங்க " மேட் ஃபார் ஈச் அதர்".

மச்சி போர்டு பிகோ சூப்பர் டா

கையில் இந்த மாத ஆட்டோ கார் நாளிதழுடன் உள்ளே நுழைந்தான் பாரதி. என் ரூம் மேட். எங்க கல்லூரி " சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் இஞ்சினியர்ஸ்" பிரசிடன்ட். பொண்ணுங்க, சினிமா, சரக்கு, கார் அல்லது பைக். இது தான் வழக்கமா பசங்க பேசுற வரிசை ஆனா இவனுக்கு மட்டும் அப்படியே ரிவர்ஸ்ல போகும்.


புன்ட்டோ முன்னாடி இதெல்லாம் நிக்குமா?

அதெல்லாம் ஒரு வண்டியா? சாதாரணமா ரோட்டுல போகும் போதே கீழே தட்டுதே

சாலிட் வண்டி பிரசிடன்ட். 130ல போய் பிரேக் போட்டேன் . எப்படி கச்சுனு நின்னுச்சுனு தெரியுமா?

என்னடா சொல்லுற? நீ கார் ஓட்டுனியா?

அட நம்புங்க பாஸ். தில் இருந்தா சொல்லுங்க ஒரு ரேஸ் வைச்சுக்கலாம்.


அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை என்பது அவன் முகத்திலே தெரிந்தது.


நீட் பார் ஸ்பீட்- ஹாட் பர்ஸ்யூட். மோதி பாக்கலாம் வர்றியா?

தூ.


ஆளாளுக்கு துப்புறானுங்களே. அடுத்த மாசம் வர்ற ஸ்போர்ட்ஸ் மீட்ல எச்சி துப்புற போட்டிய அறிமுகப்படுத்தலாம் போலவே.
அடுத்து நான் பண்ணப்போற வேலைய பாத்ததுக்கு அப்புறம் இவனுங்க மூஞ்சிய எங்க வைச்சுக்க போறாங்கனு எனக்கு தெரியல.