Sunday, December 25, 2011

காலன் காலிங்-3


தலையில் கைவத்தபடி காவல்நிலைய வாசல்ல உட்கார்ந்திருந்தேன். இப்போ வலி கொஞ்சம் கம்மி ஆகியிருந்தது. வெங்கடாசலம்
உள்ள போயி பத்து நிமிஷம் ஆச்சு. நான் மது போட்டோவை பாத்துட்டு இருந்தேன். வேற எதைப்பத்தியும் நினைச்சு பாக்கக்கூட பயமா
இருந்திச்சு. கொஞ்ச நேரத்துல என்னையும் உள்ள கூப்பிட்டாங்க. முட்டிக்கு முட்டி தட்டுவாங்களோ? ஆனா அப்படி எதுவும் நடக்கல.
என்னை உட்காரும்படி அங்க இருந்தவர் சைகை காட்டினார்.

உன் பேரு என்ன?
ரஞ்சித் சார்.
ஓ உன் பேரே ரஞ்சித் சாரா?
இல்லை நான் ரஞ்சித். சார்னு உங்களை தான் சொன்னேன்.
என்னை இப்படி பணிவா பேசுனா விட்டுருவேன்னு நினைச்சியா?

நான் பதில் ஒன்னும் சொல்லல. என்ன சொல்லனும்னு தெரியல. தப்பா ஏதும் சொல்லிட்டா அடி விழுமோனு பயமா இருந்திச்சு.

என்ன பண்ணுற?
பி.இ சார்.
எந்த காலேஜ்?
சுகந்தி காலேஜ் ஆப் இஞ்சினியரிங் சார்.
சரி ஆக்ஸிடன்ட் எப்படி ஆச்சு?
அவர் திடீர்னு உள்ள வந்துட்டார். எனக்கு கண்ட்ரோல் கிடைக்கல.
போன் பேசுனியாமே?
இல்ல சார்.
பொய் பேசுன தா**  பல்ல பேத்துடுவேன். சொல்றா
போன் வந்துச்சு சார் ஆனா பேசல.
போன் வந்தா வண்டியை ஓரமா நிறுத்திட்டு பாக்க வேண்டியது தானே? அப்படி என்ன அவசர ***?  அவசரத்துக்கு வண்டிய நிறுத்தத்தெரியாதஅந்த ஆஹாவலி ** ஒரு ட்ரெயினர் வேற. போயி அப்படி ஓரமா உட்காரு. ரைட்டர் சார் எப்.ஐ.ஆர் இன்னும் போடலைல? கொஞ்சம் வெயிட்பண்ணுங்க.

அந்த ஓரத்தில் வெங்கடாசலம் கந்தலான துணி போல கிடந்தான். நான் அவன் பக்கத்துல போயி உட்கார்ந்தேன். அப்போது தொலைபேசி  ஒலித்தது. இந்த முறை காவல்நிலைய தொலைபேசி. பேசிவிட்டு இன்ஸ்பெக்டர் வெளியே கிளம்பினார்.

ஏட்டு. அக்யூஸ்ட பத்திரமா பாத்துக்கங்க. நான் ஜி.ஹெச் வரை போயிட்டு வந்துடுறேன்.
என்ன சார் ?
இந்தா இஞ்சினியர் சார் அடிச்சு தூக்குனார்ல அவன் செத்துட்டானாம்.

என்னை முறைச்சு பாத்துட்டு அவர் வெளிய போயிட்டார். நான் தான் உள்ள போகப்போறேன். களி திங்கனும். கல் உடைக்கனும். நான் திரும்ப வெளிய வரும் போது மதுமிதாவுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஆண்ட்டியாக மாறியிருப்பாள். பாரதி ஏதாவது மோட்டார்
கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பான். வெங்கடாசலம் ஜெயில்லயே செத்துப்போயிருவான். நான் வெளிய வந்து படிப்பு, காதல் எதுவுமே கை கூடாத இன்னொரு வெங்கடாசலமாக மாறியிருப்பேன்.

Thursday, October 13, 2011

காலன் காலிங் -2

என் டார்லிங்க அசத்தனுங்கிறதுக்காக தான் தினமும் சாயங்காலம் ட்ரைவிங் க்ளாஸ் போக ஆரம்பிச்சேன். பாவம் நான் சாயங்காலம் ஷட்டில் ஆடுறதா நினைச்சிட்டு இருக்கா, திடீர்னு ஒரு நாள் அவ முன்னாடி கார் ஓட்டிட்டு போய் நின்னா என்ன பண்ணுவா? முதல்ல ஷாக் ஆயிருவா அப்புறமா ஏதாவது கிடைக்கும். நான் கிஃப்ட சொன்னேன்! அந்த நினைப்பே எனக்கு ட்ரைவிங் கத்து கொடுத்துச்சு. வெங்கடாசலத்துக்கும் இதுல கொஞ்சம் பங்கு இருக்கு. வெங்கடாசலத்தை உங்களுக்கு தெரியாதுல? அவன் தான் என் ட்ரைனர். ஏதோ நினைப்புல எப்பவுமே சில கேரக்டர்கள் சுத்திட்டு இருக்குமே அவனும் அந்த வகையறா தான்,மத்த படி அவனை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல .

அன்னிக்கும் எல்லா நாளும் மாதிரி தான் ட்ரையினிங் போயிருந்தேன். நானும் வெங்கட்டும் (பெரிய பெயரா இருக்கு. ஒவ்வொரு தடவை சொல்லவும் கடுப்பா இருக்கும் காரணத்தால் இனி வெங்கடாசலம் "வெங்கட்" என அழைக்கப்படுவார்) தான் போனோம். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என் போன் மணி அடிக்க ஆரம்பிச்சுருச்சு.மது தான். பொய் சொன்னா கண்டுபிடுச்சுடுவா அதனால பேசலாமா ? வேணாமானு நான் முடிவு பண்றதுக்கு முன்னாடி கட் ஆயிருச்சு.

"தம்பி போன் பேசறதுனா ஓரமா நின்னு பேசுங்க. வண்டி ஓட்டும் போது கவனம் ரோட்டுல..."


வெங்கட் சொல்லி முடியும் முன் மீண்டும் மது போன் செய்து விட்டாள். அவன் ஓரக்கண்ணால் அவ காண்டக்ட் பிக்சரை சைட் அடிப்பது எனக்கு தெரிந்தது . வெடுக்கென கட் செய்து விட்டேன்.

"யாரு தம்பி உன் ஆளா?"

நான் பதிலேதும் சொல்லாமல் 'ஆம்' என்பது போல தலையை மட்டும் ஆட்டினேன்.

"நானும் ஒரு பொண்ணை காதலிச்சேன் ஆனா அவளை ஒருத்தன் ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டான்."

ஓ தலைவர் தேவதாஸா? ஏன் மூஞ்சில சாணி அப்புன மாதிரியே சுத்திட்டு இருக்கான்னு யோசிச்சதுக்கு காரணம் கிடைச்சிருச்சு. ஒரு இடைவெளி விட்டு அவனே தொடர்ந்தான்.

"தினமும் அவளை இன்னொருத்தன் பொண்டாட்டியா பாக்கிறது நரகம்யா"

அதுக்கு மேல அவனால சொல்ல முடியல . கண்ணெல்லாம் கலங்கிருச்சு. திரும்பவும் போன் அடிச்சுச்சு .மது தான் . உன்னை நான் எப்பவும் மிஸ் பண்ண மாட்டேன் மதுனு நினைச்சுட்டே அவ போட்டோவ பாத்துக்கிட்டே அட்டெண்ட் பண்ணும் போது

"தடார்".

இடிச்சவுடனே எனக்கு ஒன்னும் புரியல. வேகமா நானும் வெங்கட்டும் கீழ எறங்கினோம் அதுக்குள்ள சுத்தி கூட்டம் வேற கூடிருச்சு. கூட்டத்துக்கு நடுவுல தலையில ரத்தம் வழிஞ்ச படி ஒருத்தன் கெடந்தான்.

"குருட்டு*** போன் பேசிட்டே வந்து தூக்கிட்டான்யா"

"தண்ணி அடிச்சிருக்கானா? ஊது டா"

என்ன செய்றதுனு தெரியாம நின்னப்ப பின்னந்தலையில ஒரு அடி விழுந்துச்சு. சுதாரிக்கும் முன்னாடி ஒரு நாலைஞ்சு பேரு சேர்ந்து என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க . தடுக்க வந்த வெங்கட்டுக்கும் தர்ம அடி விழுந்துச்சு. வண்டியில் அடி பட்டவனை போலவே தலையில் ரத்தம் வழிந்த படி நானும் தரையில் விழுந்தேன்.

Monday, September 5, 2011

காலன் காலிங்-1

கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போகும் போது டிரைவரை கூட்டிட்டு வரப்போறியா இல்லை என்னை ஓட்டச்சொல்லபோறியா?

மலேசியாவுக்கு கார்ல போகமுடியாது டார்லிங்.

உன்னை கார் ஓட்ட சொல்லக்கூடாதுனு தானே மலேசியா போகலாம்னு சொல்ற?

பெருத்த அவமானம். இன்னும் ரெண்டு மாசத்துல நல்லா கார் ஓட்டி ஓட்டுனர் உரிமம் எடுத்து உன்னை ஒரு ரொமண்டிக் ட்ரைவ் கூட்டிட்டு போகலைனா...

போகலைனா?

நீ என்னை கூட்டிட்டு போ

தூ

என்ன வாய்க்குள்ள கொசு போயிருச்சா?

மொக்கை. நான் நூலகத்துக்கு போறேன் அப்புறம் போன் பண்றேன்

ஓகே டார்லிங் .பை

கார் ஓட்டத்தெரியாம இருக்கிறது ஒரு குற்றமா? இவ்வளவு நேரமா என் கிட்ட பேசிக்கொண்டிருந்தது என் டார்லிங் மதுமிதா. கோவை அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மென்பொருள் தொழில்நுட்பம் படிக்கிறாள். கவிஞர்கள் பாஷை வராத காரணத்தால் என் சொந்த வர்ணிப்பில் அவ"செம ஹோம்லியான பிகரு". நானும் அதே கல்லூரி அதே ஆண்டு தான் ஆனால் துறை மட்டும் இயந்திரவியல். முதல் வருடமே உன் நம்பர் கேட்டு சீனியர்கள் ராகிங் செய்கிறார்கள் என்று கெஞ்சி வாங்கி அது அந்த வீணாப்போன சீனியர்களுக்கு தெரிந்து உண்மையிலே நம்பர் கொடுக்கும்படி என்னை டார்ச்சர் செய்து "அடிச்சும் கேப்பாய்ங்க சொல்லிறாத"னு நாலு அடியையும் தாங்கி , ச்சே பயபுள்ள நமக்காக அடி வாங்குறானேனு அவளும் உருகி அப்படி தான் என் காதல் பயணம் தொடங்கியது. இந்த கார் ஓட்டுற ஒரு விஷயத்த தவிர மிச்ச எல்லாத்துலயும் நாங்க " மேட் ஃபார் ஈச் அதர்".

மச்சி போர்டு பிகோ சூப்பர் டா

கையில் இந்த மாத ஆட்டோ கார் நாளிதழுடன் உள்ளே நுழைந்தான் பாரதி. என் ரூம் மேட். எங்க கல்லூரி " சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் இஞ்சினியர்ஸ்" பிரசிடன்ட். பொண்ணுங்க, சினிமா, சரக்கு, கார் அல்லது பைக். இது தான் வழக்கமா பசங்க பேசுற வரிசை ஆனா இவனுக்கு மட்டும் அப்படியே ரிவர்ஸ்ல போகும்.


புன்ட்டோ முன்னாடி இதெல்லாம் நிக்குமா?

அதெல்லாம் ஒரு வண்டியா? சாதாரணமா ரோட்டுல போகும் போதே கீழே தட்டுதே

சாலிட் வண்டி பிரசிடன்ட். 130ல போய் பிரேக் போட்டேன் . எப்படி கச்சுனு நின்னுச்சுனு தெரியுமா?

என்னடா சொல்லுற? நீ கார் ஓட்டுனியா?

அட நம்புங்க பாஸ். தில் இருந்தா சொல்லுங்க ஒரு ரேஸ் வைச்சுக்கலாம்.


அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை என்பது அவன் முகத்திலே தெரிந்தது.


நீட் பார் ஸ்பீட்- ஹாட் பர்ஸ்யூட். மோதி பாக்கலாம் வர்றியா?

தூ.


ஆளாளுக்கு துப்புறானுங்களே. அடுத்த மாசம் வர்ற ஸ்போர்ட்ஸ் மீட்ல எச்சி துப்புற போட்டிய அறிமுகப்படுத்தலாம் போலவே.
அடுத்து நான் பண்ணப்போற வேலைய பாத்ததுக்கு அப்புறம் இவனுங்க மூஞ்சிய எங்க வைச்சுக்க போறாங்கனு எனக்கு தெரியல.


Saturday, May 21, 2011

பற்றும் வரவும் காதல்!

பற்றில் இதயம் வைத்தேன்
வரவில் வலியை வைத்தேன்
உறவில் உன்னை வைத்தேன்
உயிரில் காதல் வைத்தேன்!

இரவில் கனவுகள் சுமந்தேன்
பகலில் நினைவுகள் சுமந்தேன்
இரண்டிலும் உன்னை சுமந்தேன்!

நிலவுக்கு எட்டி குதித்தேன்
வானை எட்டவுமில்லை
பூமி கிட்டவுமில்லை
காதலின் உலகத்தில் நான் திரிசங்கானேன்!

Saturday, March 5, 2011

வார்த்தை ஒன்னு


கை பேசியில் தகவல் வந்த ஒலியில் தூக்கம் கலைந்தாள் தாமரை.

"ஐ லவ் யூ. என்ன முடிவு பண்ணியிருக்க? இப்போது கூப்பிடவா?"

குறுந்தகவல் அனுப்பியிருந்தது ரவீந்திரன்.அவளது காதலன்.

வேணாம். அவர் குளிச்சிட்டு இருக்கார். இன்னிக்கு சொல்லிடலாம்.
எதுக்கு அவன் கிட்ட சொல்லிட்டு ? பிரச்சனை ஆயிர போது!
எங்க அப்பா அம்மா பண்ண தப்புக்கு இவருக்கு நாம துரோகம் பண்ணக்கூடாது.
என்ன லாஜிக்கோ?
சரி நான் அப்புறம் கூப்பிடறேன்.

உள்ளே அவளது கணவன் தினேஷ் குளித்துக்கொண்டிருந்தான்.

நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் . கல்யாணத்துக்கு முன்னாடியே இதை சொல்ல முயற்சி பண்ணேன் ஆனா சொல்ல முடியல. நான் ஒருத்தரை காதலிக்கிறேன்.

குளியலறை கதவு திறக்கவே தனது ஒத்திகையை நிறுத்திக்கொண்டாள்.
குட் மார்னிங்க். என்ன டல்லா இருக்க?
அதெல்லாம் இல்ல.
எனக்கு நாளைக்கு கொடைக்கானல்ல ஒரு மீட்டிங் இருக்கு.நீயும் வா

முதலில் தயக்கம் தோன்றினாலும் தனியே சொல்வதற்க்கு இதை விட்டால் வேறு தருணம் தோன்றாது என தோன்றவே ஒப்புக்கொண்டாள்.விருப்பமில்லாத திடீர் கல்யாணம், கல்யாணம் முடிந்தபின் வந்து கெஞ்சும் காதலன், கடைசி வரை காதலை காதிலும் வாங்க மறுத்த பெற்றோர், இப்போது ஒரு அன்னியன் கணவனாக. இவனாவது சொல்வதை புரிந்து கொள்வானா?

பயணம் முழுவதும் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அவன் கைபேசியில் யாரிடமோ கதைத்து கொண்டிருந்தான். அவள் அவனிடம் கண்களை மூடிக்கொண்டு மனதில் அவனிடம் சொல்லப்போகும் காட்சியை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள். விருந்தினர் மாளிகையை அடைந்த போது அவள் உறங்கிவிட்டிருந்தாள்.குளிரில் நடுங்கியவாறே போய் மெத்தையில் விழுந்தது தான் அவள் நினைவில் இருந்தது.

கனவிலும் அதே காட்சி தான் ஒடிக்கொண்டிருந்தது.

போர்வையை யாரோ உருவுவது போல் இருக்கவே திடுக்கிட்டு எழுந்தாள். எதிரே தினேஷ்.

உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.

இதை கேட்டதும் அவள் தூக்கம் முற்றிலுமாக கலைந்திருந்தது.

கல்யாணத்துக்கு முன்னாடியே உங்கிட்ட சொல்ல முயற்சி பண்ணேன். ஆனா முடியல.

அதே வார்த்தைகள். அவளது இதயத்துடிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. ஒருவேளை உண்மையை தெரிந்து கொண்டானா? தூக்கத்தில் ஏது உளறி விட்டேனா அல்லது அவனும் யாரையும் காதலிக்கிறானா? அந்த குளிரிலும் அவளுக்கு வியர்த்து.

ஐ லவ் யூ

அவள் புரியாமல் முழித்தாள்.

ஐ லவ் யூ

கொடைக்கானல், மீட்டிங் எல்லாமே இப்போது அவளுக்கு புரிந்தது

என்னை பிடிச்சிருக்கா?

பதில் சொல்ல வார்த்தைகள் இல்லாததால் அவனை எட்டி அணைத்தாள்.

முற்றும்.