Sunday, September 5, 2010

தனசேகரன் F/O 'சி' ப்ளாக் சித்ரா-1

1.அன்றொரு நாள்........


அன்னிக்கு என் நண்பனோட மகள் நிச்சயதார்த்தம் முடிஞ்சு கொஞ்சம் தாமதமாக தான் என்னோட அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்தேன்.
வாகன நிறுத்துமிடத்தில் யாரோ சிரித்துக்கொண்டிருப்பது கேட்டது. நான் வீட்டுக்கு போயிருக்கலாம் ஆனா ஏன் சத்தம் கேட்ட பக்கம் போனேன்னு இன்னிக்கு வரை எனக்கு தெரியல.அது தான் நான் முன்னாடி சொன்ன என் முடிவை நோக்கி நான் எடுத்து வைச்ச முதல் அடி.

காற்றில் மது வாடை கலந்திருந்தது. அங்கே இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருப்பது தெரிந்தது. நான் அவர்கள் பார்வையில் படாமல் மறைந்துகொண்டேன்.அவர்களில் ஒருவனை எனக்கு தெரியும். என் ப்ளாட்டிற்க்கு எதிர் ப்ளாட்டில் தான் இருக்கிறான் இன்னொருத்தன் அவன் நண்பனாக இருக்க வேண்டும்.குசு குசுவென பேசிக்கொண்டிருந்தவனது குரல் திடீரென உச்ச ஸ்துதியை அடைந்தது.

பார்றா இன்னும் ஒரு மாசத்துல அந்த சித்ராவை மடக்கி காட்டுறேன்

எந்த சித்ரா டா?

இதே 'சி' ப்ளாக்குல் இருக்குற சித்ரா தான்

அதற்கு மேல் கேட்க விருப்பமில்லாமல் நான் வீட்டிற்கு சென்றேன். சந்தேகமே வேண்டாம் அவர்கள் பேசிக்கொண்டிருந்த 'சி' ப்ளாக் சித்ராவின் அப்பா தான் நான். அப்புறம் ஏன் நாலு போடாம வந்தேன்னு நினைக்குறீங்களா? அவர்களை திட்டினாலோ அடித்தாலோ விஷயம் வெளிய தெரிஞ்சுடும் . சத்தமே இல்லாம் அவங்களை ஏதும் பண்ணுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல.

அந்த பசங்க பேசினது ஒன்னும் பெரிய தப்பில்லை தான். 40 வருஷத்துக்கு முன்னாடி இன்னொருத்தன் பொண்ணு பின்னாடி நான் சுத்தும் போது இனிச்சது இன்னிக்கு என் பொண்ணு பின்னாடி ஒருத்தன் சுத்தும் போது கசக்குது. ஆனா அவன் சொன்ன வார்த்தை சரியில்ல. மடக்கப் போறனாம். மடக்குறதுக்கு என் பொண்ணு என்ன குடையா? இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்.

வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். என் மகள் வது கதவை திறந்துவிட்டு அவள் அறைக்குள் சென்று விட்டாள் . இதுல என்ன இருக்கு? அவள் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல , ஏன் என் முகத்தை கூட நிமிந்து பாக்கலை.எனக்கும் என் பொண்ணுக்கும் நடுவுல எவ்வளவு தூரம் இருக்குனு என் மனைவி உயிரோட இருந்த வரை எனக்கு தெரியல. இப்போ தெரிஞ்சாலும் என்ன பண்ணனும்னு தெரியல.21 வருடங்களாய் எங்களிடயே கட்டப்பட்ட சுவர், இடித்தால் உடைவது சுவரா?உறவா? என தெரியாமல் தவிக்கிறேன்.