நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்தபடி கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தார் முத்துக்குமார்.
"ஐயா உங்களுக்கு கடுதாசி வந்திருக்கு" என பணிவுடன் நீட்டினான் அவரது உதவியாளன் முனுசாமி.
அனுப்புனர் பெயர் இருளப்பன் என குறிப்பிடப்பட்டிருந்தது. யார் இந்த இருளப்பன் என யோசித்துக்கொண்டே கடிதத்தை பிரிக்கத்தொடங்கினார் அவர்.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
உங்கள் மீது பாசமும் பற்றும் கொண்ட இருளப்பன் எழுதுவது. இது என் நிஜப்பெயர் அல்ல. நான் ஏன் இந்த பெயரை உபயோகப்படுத்துகிறேன் என உங்களுக்கு போகப்போக புரியும். என் காதலை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கடிதம்.
என் பக்கத்து வீட்டில் வசிக்கும் மைனா(இதுவும் புனைப்பெயர் தான்) மீது எனக்கு ஒரு உய்யா(காதல்). ஆனால் அவளுக்கும் எனக்கும் நேரடி அறிமுகமே இல்லை. அவளெல்லாம் எனக்கெங்கே கிடைக்கப்போகிறான் என்ற சோகத்துடன் என வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருந்த போது தான் எங்கள் தெருவில் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைபட தொடங்கியது.மெகா சீரியல் பார்க்கும் வாய்ப்பை இழந்த என் அம்மாவும் அவள் அம்மாவும் எங்கள் தெருவில் நடக்கும் மெகா சீரியல்களை பற்றி என் வீட்டில் உட்கார்ந்து பேசத்தொடங்கினர்.
ஒரு மாதம் கழிந்திருக்கும்.இப்போது ஐந்து மணி நேரம் மின்சாரம் தடை. தடையில்லா மின்சார சேவையும்(U.P.S) பல்லை காட்டிவிட்டதால் புரளி பேசும் பெண்கள் சபையில் மைனாவும் வந்து சேர்ந்தாள். சபை எங்கள் வீட்டில் நடப்பதால் அவ்வப்போது நானும் அங்கே தலைகாட்டி மைனாவுடன் அறிமுகமானேன். என் அதிர்ஷ்டத்தை என்னாலேயே நம்பமுடியவில்லை. அடுத்த மாதமும் வந்தது.
எட்டு மணி நேர மின்சாரத்தடை. என் வாழ்க்கையின் வசந்த காலம் அது தான். கைபேசிகளும் ஐபாட்களும் சார்ஜ் இல்லாமல் செத்துப்போயின. புரளிகளும் புத்தகங்களும் புளித்துப்போன நிலையில் வேறு வழியில்லாமல் அவளும் என்னை காதலிக்க ஆரம்பித்தாள். இப்போது மின்சாரம் இல்லையெனில் அவள் அம்மாவுடன் என் வீட்டுக்கு வருவதில்லை . நாங்கள் தான் இப்போது தனி சபை அமைத்து விட்டோமே!!
தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன, குழந்தைகள் பரீட்சைக்கு படிக்க வழியில்லை என்றெல்லாம் உங்களை குறை சொல்பவர்கள் தான் அதிகம். ஆனால் உங்களாலும் நன்மைகள் நடக்கிறது எனபதை நீங்கள் அறிந்து கொள்ளவே இந்த கடிதம். தெருவை இருட்டாக்கி என் வாழ்க்கயை வெளிச்சம் ஆக்கிய வள்ளலே நீங்கள் வாழ்க!!
என்றும் அன்புடன்,
இருளப்பன்.
கடிதத்தை படித்துவிட்டு முனுசாமியிடம் நீட்டினார் தமிழக மின்சாரவாரியத்தலைவர் முத்துக்குமார்.
"என்ன சார் இப்படி எழுதிருக்கு?" என்ற படி கடிதத்தை புரட்டினான் அவன்
"எவனோ வேலை இல்லாதவன் பொழுது போக்குக்கு எழுதி இருக்கான். அதை தூக்கி குப்பையில போடு."
அதே நேரம் விளையாடச்செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இருளப்பனும் , தோழியின் வீட்டுக்கு படிக்கச்செல்வதாக கூறிவிட்டு முத்துக்குமாரின் மகள் மைனாவும் முதன்முறையாக இணைந்து சினிமாவுக்கு போயினர்.
முற்றும்.
2 comments:
letter is super, but its not a love letter machi....super thought and super letter...awesome
thought about naming it as irulappanin kadhal kadhai
Post a Comment