8.30 மணி ஸ்பெஷல் கிளாசுக்கு கிளம்பாமல் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த போது காலையில் வாங்க வேண்டிய கடைசி கட்ட திட்டையும் வாங்கி முடித்தான்.
"எருமை மாடு ஏன் என் உயிரை வாங்குற?கூப்பிட்டு விட்டா நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன்"
சரி.காலைக்கு இது போதும் என நினைத்ததால் ரிமோட்டை எடுத்தான்.சரியாக அவன் ஆப் பட்டனில் கை வைத்தபோது யாரோ ஒரு பெருசு இந்த நாள் இனிய நாள் என சொல்லிக்கொண்டிருந்தது.கை தானாக ஆப் பட்டனை அழுத்த டிவி ஆப் ஆகியது. இப்படி பொறியியல், கம்ப்யூட்டர் என டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்தில் பிறந்ததற்க்கு கல் காலத்தில் பிறந்திருந்தால் படிக்காமல் ஜாலியாக இருந்திருக்கலாமே என நொந்து கொண்டே பள்ளிக்கு போனான்.வழக்கம் போல பள்ளிக்கூட வாசலில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள்.
தலைமை ஆசிரியையின் அறை வாசலில் ரகுவின் அம்மா உட்கார்ந்திருந்தார்கள்.அவனுக்கு எதுவோ சரியாக படவில்லை.கவனிக்காதவாறு வகுப்புக்கு சென்று விடலாமா என யோசித்தான். கூப்பிட்டால் பேசலாம் இல்லையென்றால் எஸ் ஆகிவிடவேண்டுமென நினைத்துக்கொண்டே வேகமாக நடந்தான்.அவனது நல்ல நேரமோ என்னவோ அவனை ரகுவின் அம்மா கவனிக்கவில்லை.
கடைசி பெஞ்சில் நரேந்திரனும் ராஜாவும் இவனுக்காக காத்திருந்தார்கள்
என்ன மாப்ள? என்றான். அவர்கள் அவனை அமைதியாக இருக்கும் படி சைகை காட்டினார்கள். ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.அதற்க்குள் அசெம்பிளி மணி அடித்தது.வழக்கமாக நடக்கும் அசெம்பிளி போல அன்று இல்லை. காற்றில் கூட டென்ஷன் கலந்திருந்தது.அசெம்பிளி முடிந்ததும் 10 ஏ மாணவ மாணவிகளை மட்டும் காத்திருக்கச்சொன்ன போது அவனுக்கு லேசாக வேர்க்கத்தொடங்கியது.மெதுவாக திரும்பி ராஜாவை பார்த்தான் அவனும் இவனை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
டியர் ஸ்டூடன்ட்ஸ்
தலைமை ஆசிரியையின் குரல் தான் அது.அவன் நிமிர்ந்து மேடையை நோக்கினான்.
உங்க வகுப்புல யாரோ ஒருத்தர் தப்பு பண்ணியிருக்கீங்க அவங்களே வந்து சாரி கேட்டுட்டா அந்த விசயத்த அப்படியே விட்டுடலாம்.
அவனுக்கு அப்போது தான் சிரிப்பு வந்தது. என்ன விஷயம்னு சொன்னா தான யாராவது ஒத்துக்குவாங்க.ஒவ்வொரு நாளும் எத்தனையோ தப்பு நடக்குது அதுல இது எதை கேக்குதோ?தனக்கு பக்கத்தில் இருந்த மாணவிகள் வரிசை பக்கம் லேசாக கண்ணை திருப்பினான். ஹேம்ப்ரியா வெயில் தாங்கமுடியாமல் தனது கைக்குட்டையால் வியர்வையை ஒற்றிக்கொண்டிருந்தாள். பொறுத்துப்பார்த்த மேடம் மாணவிகளை மட்டும் தன் அறைக்கு வர சொல்லிவிட்டு வேகமாக போனாள்.ஹேமா இன்னமும் வியர்வையை ஒற்றிக்கொண்டிருந்தாள்.சந்திரன் அவளை திரும்பி பார்த்துவிட்டு வகுப்பறை நோக்கி நடக்கத்தொடங்கினான்.
முதல் பீரியட் முடிய சில நிமிடங்களே இருந்த போது தான் மாணவிகள் திரும்ப வந்தார்கள்.கடைசி பெஞ்ச் வனிதா விடம் என்ன ஆச்சு என பேப்பரில் எழுதி தூக்கிப்போட்டான் நரேந்திரன்.அவளும் ஏதோ பதில் எழுதி தூக்கிப்போட்டாள். நரேந்திரன் முகத்தில் ஆச்சரியம் படர்ந்தது ஒரே நொடி தான் முகத்தை மீண்டும் நார்மலாக்கி விட்டு சந்திரனிடம் நீட்டினான்.அவனும் ஆவலாய் அதை வாங்கிப்பார்த்தான்
"ஹேமா ரகுவுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கா"
ராஜாவையும் நரேந்திரனையும் திரும்பி பார்த்தான். ராஜா அமைதி என சைகை காட்டினான்.சந்திரன் அந்த பேப்பரை வாயில் போட்டு சாப்பிடத்தொடங்கினான்.
No comments:
Post a Comment