தலையில் கைவத்தபடி காவல்நிலைய வாசல்ல உட்கார்ந்திருந்தேன். இப்போ வலி கொஞ்சம் கம்மி ஆகியிருந்தது. வெங்கடாசலம்
உள்ள போயி பத்து நிமிஷம் ஆச்சு. நான் மது போட்டோவை பாத்துட்டு இருந்தேன். வேற எதைப்பத்தியும் நினைச்சு பாக்கக்கூட பயமா
இருந்திச்சு. கொஞ்ச நேரத்துல என்னையும் உள்ள கூப்பிட்டாங்க. முட்டிக்கு முட்டி தட்டுவாங்களோ? ஆனா அப்படி எதுவும் நடக்கல.
என்னை உட்காரும்படி அங்க இருந்தவர் சைகை காட்டினார்.
உன் பேரு என்ன?
ரஞ்சித் சார்.
ஓ உன் பேரே ரஞ்சித் சாரா?
இல்லை நான் ரஞ்சித். சார்னு உங்களை தான் சொன்னேன்.
என்னை இப்படி பணிவா பேசுனா விட்டுருவேன்னு நினைச்சியா?
நான் பதில் ஒன்னும் சொல்லல. என்ன சொல்லனும்னு தெரியல. தப்பா ஏதும் சொல்லிட்டா அடி விழுமோனு பயமா இருந்திச்சு.
என்ன பண்ணுற?
பி.இ சார்.
எந்த காலேஜ்?
சுகந்தி காலேஜ் ஆப் இஞ்சினியரிங் சார்.
சரி ஆக்ஸிடன்ட் எப்படி ஆச்சு?
அவர் திடீர்னு உள்ள வந்துட்டார். எனக்கு கண்ட்ரோல் கிடைக்கல.
போன் பேசுனியாமே?
இல்ல சார்.
பொய் பேசுன தா** பல்ல பேத்துடுவேன். சொல்றா
போன் வந்துச்சு சார் ஆனா பேசல.
போன் வந்தா வண்டியை ஓரமா நிறுத்திட்டு பாக்க வேண்டியது தானே? அப்படி என்ன அவசர ***? அவசரத்துக்கு வண்டிய நிறுத்தத்தெரியாதஅந்த ஆஹாவலி ** ஒரு ட்ரெயினர் வேற. போயி அப்படி ஓரமா உட்காரு. ரைட்டர் சார் எப்.ஐ.ஆர் இன்னும் போடலைல? கொஞ்சம் வெயிட்பண்ணுங்க.
அந்த ஓரத்தில் வெங்கடாசலம் கந்தலான துணி போல கிடந்தான். நான் அவன் பக்கத்துல போயி உட்கார்ந்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது. இந்த முறை காவல்நிலைய தொலைபேசி. பேசிவிட்டு இன்ஸ்பெக்டர் வெளியே கிளம்பினார்.
ஏட்டு. அக்யூஸ்ட பத்திரமா பாத்துக்கங்க. நான் ஜி.ஹெச் வரை போயிட்டு வந்துடுறேன்.
என்ன சார் ?
இந்தா இஞ்சினியர் சார் அடிச்சு தூக்குனார்ல அவன் செத்துட்டானாம்.
என்னை முறைச்சு பாத்துட்டு அவர் வெளிய போயிட்டார். நான் தான் உள்ள போகப்போறேன். களி திங்கனும். கல் உடைக்கனும். நான் திரும்ப வெளிய வரும் போது மதுமிதாவுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஆண்ட்டியாக மாறியிருப்பாள். பாரதி ஏதாவது மோட்டார்
கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பான். வெங்கடாசலம் ஜெயில்லயே செத்துப்போயிருவான். நான் வெளிய வந்து படிப்பு, காதல் எதுவுமே கை கூடாத இன்னொரு வெங்கடாசலமாக மாறியிருப்பேன்.