எதிர் வீட்டு செந்தில் பக்கத்து வீட்டு மாலதியை காதலிக்கிறான்.முக்கு வீட்டு மூர்த்தி மாடி போர்ஷன்ல இருக்குற தேவியை காதலிக்கிறான்.வகுப்பறையில் அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கிருஷ்ணகுமார் அதே வகுப்பில் படிக்கும் ஜெயந்தியை காதலிக்கிறான்.நண்பர்கள் எதிரிகள் தெரிந்தவன் தெரியாதவன் என எல்லோரும் காதலித்த போதும் காதலும் இல்லாமல் காதலியும் இல்லாமல் அவன் மட்டும் தனித்து நின்றான்.அவன் தான் சந்திரன்.
அவனுக்கும் இவர்களை பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக தான் இருக்கும்
ட்ரீங்க் ட்ரீங்க்
அந்த அலாரத்தின் ஒலி வீடு முழுக்க எதிரொலித்த போதும் சந்திரன் எழுந்திரிக்கவில்லை.கனவிலாவது காதல் கிட்டாதா என்ற ஏக்கத்தோடு கனவுகளோடு போராடிக்கொண்டிருந்தான்.இரண்டொரு நிமிடங்களில் அவன் போராட்டத்துக்கு விடை கிடைத்தது
"எருமை மாடு எழுந்திரு ட்யூஸனுக்கு நேரமாகுது.ஒழுங்கா படிக்கலைனா மாடு தான் மேய்க்கனும்"
வழக்கமாக கேட்கும் அதே வசனம் தான்.சோம்பல் முறிப்பதற்க்குள் இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் திட்டு வந்து சேர்ந்தது. இதுக்கு மேல தூங்க முடியாது என உறுதியாக தெரிந்த பின்பு மெதுவாக ஆமை வேகத்தில் எழுந்தான் அவன்.பல் விலக்குவதற்க்குள் மூன்றாம் கட்ட திட்டும் விழுந்துவிட்டது.
"எருமை மாடு பாத்ரூமுலயே தூங்கிட்டியா?"
ஒவ்வொரு நாளும் போராட்டம் என்பது அவன் காலையில் எழுந்து ட்யூஸன் கிளம்புவதில் இருந்து தொடங்கும். ஆறு மணி ட்யூஸனுக்கு அவன் எழுந்திருப்பதே ஆறு மணிக்குதான் அப்போது ஆரம்பிக்கும் போராட்டம் இரவு படுக்க போகும் வரை தொடரும். போனவருடம் வரை அவனது அம்மா பாமா அன்பாக தான் இருந்தாள்.பத்தாம் வகுப்பு ஆரம்பித்த பிறகு ஏன் அம்மா மாறி விட்டாள் என்பது தான் அவனுக்கு புரியவில்லை. அவனிடம் கத்தி கத்தியே தனக்கு பிரஷர் வந்துவிட்டது என அடிக்கடி அம்மா சொல்லுவாள்.ஆனால் அம்மாவால் ஹை டெசிபெலில் பேசாமல் இருக்கமுடியாது என அவன் அறிந்திருந்தான்.பள்ளிக்கூடம் வீடு என மாறி மாறி திட்டு வாங்கியதில் மிச்ச சொச்சம் இருந்த சொரணையும் போய்விட்டது.ஒரு வழியாக ட்யூஸன் கிளம்புவதற்க்குள் 6.15 ஆகிவிட்டது.சரி அங்க போயும் திட்டு வாங்கிக்கலாம் என மெதுவாக தனது சைக்கிளை ஓட்டத்தொடங்கினான்.
அவன் கிளம்பிய பிறகு தான் பாமாவிற்க்கு மூச்சே வந்தது.ஒரு டம்ள்ர் தண்ணியை குடித்துவிட்டு வாசலில் வந்தமர்ந்தாள். இவன் வயசு பிள்ளைங்க எல்லாம் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்குதுங்க.இவன் மட்டும் ஏன் இப்படி பண்றான்?மக்கு பிள்ளைனா கூட பரவாயில்ல நல்லா படிக்குற பையன் தானே. ஒரு வேளை சேர்க்கை சரி இல்லையோ?
பாமா காபி போடு. சந்திரன் அப்பாவின் குரல் அவளது சிந்தனையை கலைத்தது.இன்று மிச்சம் இருக்கும் வீட்டு வேலையை நினைக்கும் போதே அவளுக்கு மலைப்பாக இருந்தது.
பாமா
இதோ வர்றேங்க
பாமா கிச்சனுக்கு விரைந்தாள்.
சந்திரன் திருப்பதி காலனியை நெருங்கும் போது பின்னால் இருந்து யாரோ பெல் அடிப்பது போல் இருந்தது. இடது பக்கம் பாதி தலையை திருப்பினான் ஹேமப்ரியா வந்து கொண்டிருந்தாள். உலக அதிசயம் தான் ஹேமப்ரியா ட்யூஸனுக்கு லேட்டா?அவனால் தன் கண்ணையே நம்பமுடியவில்லை.
மாப்ளே மாப்ளே
பழகிய குரல் போல் இருக்கவே திரும்பி பார்த்தான்.அவளுக்கும் பின்னால் லொங்கு லொங்கென்று சைக்கிளை மிதித்து வந்து கொண்டிருந்தான் நரேந்திரன்.அவனுக்காக சந்திரன் கொஞ்சம் மெதுவாக ஹேமப்ரியா அவனை முந்திக்கொண்டு சென்றாள். இருவரும் ட்யூஸனுக்குள் போன போது ஆர்க்கானிக் கெமிஸ்ட்றி நடத்திக்கொண்டிருந்தார் நாராயணன்.இவர்களை பார்த்ததும் பாடத்தை நிறுத்தினார்.
என்னடே சந்திரா இன்னிக்கும் ட்யூஸனுக்கு லேட்டா வந்திருக்கே?தனியா வந்தா திட்டுவேன்னு கூடவே உன் நண்பனையும் லேட்டாக்கிட்டியாடே?
இல்லை சார் லேட்டாயிடுச்சு
அது தான் மணி பாக்கத்தெரிஞ்ச குழந்தைக்கு கூடத்தெரியுமே. நான் ஏன் லேட்டுனு கேட்டேன்
சந்திரன் திரும்பி நரேந்திரன் மூஞ்சியை பார்த்தான்.அவன் யாரையோ திட்டுவது போல வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான்.
சரி டே ரெண்டு பேரும் உள்ளாற வாங்க.
கடைசி வரிசைக்கு முந்தின வரிசையில் முத்துராஜா பக்கத்தில் அவர்களுக்கான இடம் காலியாய் இருந்தது.
டேய் அவளை மட்டும் ஒன்னுமே சொல்லாம உள்ள விட்டான்
வந்தவுடன் பற்றவைத்தான் முத்துராஜா.
அவன் கிடக்கான் விடு டா
வந்தது லேட் இதுல என்னடே பேச்சு?
நோட்ஸ் காட்ட சொன்னேன் சார்.
இன்னிக்கு உங்க அப்பாவுக்கு பேச வேண்டியிருக்கும் போல
அவன் பதிலேதும் பேசவில்லை.
ஹைட்ரஜன் வர்றான் ஆக்சிஜனும் வர்றான். ரெண்டு பேரும் மோதுற இடத்தில் டமால்.வாட்டர் அதாவது தண்ணீர் உருவாகுறான்.
நாராயணன் நடத்துற ஸ்டைல் இது தான். அவர் இப்படி சொன்னவுடனே ஏதோ பெரிய காமெடியை கேட்ட மாதிரி இந்த படிப்பாளி கூட்டமெல்லாம் சேர்ந்து சிரிப்பாங்க. இதுல என்ன காமெடி இருக்கு? வாத்தியார்களும் இந்த படிப்பாளிகளும் இருக்கும் வரை தன் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போவதில்லை என்பதை நினைத்து நொந்துகொண்டான்.
4 comments:
படித்துவிட்டு ரொம்ப நேரம் சிரிச்சேன் ...... டியூஷன் படித்த நாட்கள் ஓடியது மனதில் :) :) :) சார் பாத்தா ரொம்ப சந்தோசப்படுவாங்க ஹி ஹி ஹி ஹி :) :) :) :) :) :)
தாறு மாறு .. கலக்குங்க ..
super comedy karthi......
@nive,nizhalmanithan,priya: :-)
Post a Comment