Saturday, May 19, 2012

கொள்ளிவாயனும் உடைந்த சத்தியங்களும்!!



பகுதி-1:ஒரு இரவின் கதை

மூன்று அடுக்குகளும் நானுற்றி இருபது அறைகளும் கொண்டது அந்த தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்கள் விடுதி. இரவு பனிரெண்டு மணிக்கும் அனைத்து அறையிலும் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாணவர்கள் பரபரப்புடன் படித்துக்கொண்டிருந்தனர். படிப்பு தலையில் ஏறாதவர்கள் கடமைக்கு புத்தகத்தை கையில் வைத்திருந்தனர். சிலரோ எந்திரன் ரஜினி போலவும் படிக்க முயற்சித்துக்கொண்டிருந்தனர். அந்த பெரிய விடுதியில் இரண்டு அறைகளில் மட்டும் வெளிச்சம் இல்லை. ஒன்று,மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டதால் இரண்டு வருடங்களாக மூடியிருக்கும் அறை.இரண்டாவது அறையில் தான் கதிரவன் இருந்தான்.இருட்டில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை.கதவு அருகில் யாரோ வருவது போல இருந்தது. அவனாக தான் இருக்கவேண்டும். வேகமாக கதவை திறந்தான். அவனே தான்! கார்த்திக்.


மச்சான் ஒருத்தன் கிட்ட கூட இல்லையாம்.


இருந்தாலும் கொடுக்கமாட்டானுங்க.


நீ கொடுப்பியா?காலையில பரீட்சைய வைச்சுகிட்டு நீ கொடுப்பியா?


கதிரவன் இல்லையென தலையசைத்தான்.


இப்படி ஆகும்னு நான் நினைக்கல கார்த்தி. இன்னும் ரெண்டு பில்டர் வாங்கியிருந்தா சரியா இருந்திருக்கும்.


பேசாத எனக்கு பைத்தியம் பிடிக்கப்போகுது


சிகரட் சரி ஒரு பீடி கூடவா கிடைக்கல


கட்டை பீடி கூட கிடைக்கல. கினமெடிக்சாவது!மண்ணாவது! நான் தூங்கப்போறேன். நாளைக்கு உனக்கு என்ன?


டி.எஸ்.பி


தேவி ஸ்ரீ பிரசாத்தா? 


ரொம்ப கேவலமான மொக்கை. டிஜிட்டல் சிக்னல் பிராஸசிங். அதுக்கு இன்னொரு பெயர் டிகிரி ஸ்டாப்பிங் பேப்பர்.


அப்போ நீயும் கான்வக்கேஷன்ல டிகிரி வாங்கப்போறதில்ல . குட் நைட் மச்சி.


கார்த்திக் போய்விட்டான் ஆனால் கதிரவனுக்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் ஸ்வாதியின் நியாபகம் வந்தது. ஸ்வாதியும் அவனும் ஒரே வருடம் தான் கல்லூரியில் சேர்ந்தனர். அந்த பேட்சிலே அழகான பெண் அவள் தான். அதனால் அவளுக்கு ஒரு ரசிகர் மன்றமே உருவானதில் ஆச்சரியம் இல்லை ஆனால் அந்த கூட்டத்தில் கதிரவனும் சேர்ந்தது அவனுக்கே ஆச்சரியம் தான். அவளோ இவர்களில் ஒருவனை கூட இன்று வரையில் மனிதனாக கூட பார்த்ததில்லை.

ஸ்வாதி அவனை பார்த்து மயங்குவதற்க்கு அவனிடம் ஒன்றுமில்லை என்று அவனுக்கே தெரியும். படிப்பு முடியும் முன் ஒரு வேலை கிடைத்து விட்டால் அவளிடம் காதலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாவது கிடைக்கலாம்.

"ஹலோ ஸ்வாதி நான் கதிரவன். பைனல் இயர் ஐ.டி . ஒரு அரியர் வைச்சுருக்கேன் . நான் உன்னை நாலு வருசமா காதலிக்குறேன்".


"ஹலோ ஸ்வாதி நான் கதிரவன். பைனல் இயர் ஐ.டி . முடிச்சவுடனே டி.சி.எஸ்'ல ஜாய்ன் பண்றேன். நான் உன்னை நாலு வருசமா காதலிக்குறேன்".

இந்த இரண்டையும் சொல்வதிலேயே வித்தியாசம் தெரிகிறது அல்லவா? காதலை வெளிப்படுத்த ஒரு வேலை வேண்டும். வேலை கிடைக்க அரியரை க்ளியர் பண்ணவேண்டும் அதற்கு படிக்கவேண்டும். அதற்கு கண்முழிக்க வேண்டும். இளைய தளபதி சொன்னது போல் வாழ்க்கை வட்டமாக தான் இருக்கவேண்டும். எதை சிந்தித்தாலும் மனம் இறுதியில் ஒன்றை தான் சுற்றிக்கொண்டிருந்தது. ஒரு சிகரெட். வெறுப்புடன் மெத்தையில் புரண்டபோது தான் தலையனை அடியில் வைத்த கடவுள் படம் கையில் சிக்கியது.

கடவுளே ஒரு சிகரெட்டோ பீடியோ இன்னிக்கு கொடு . நாளையிலிருந்து இந்த கருமத்த விட்டுடுறேன். இது நான் நாளைக்கு எழுதப்போற பரீட்சை மேல, எனக்கு கிடைக்கப்போற வேலை மேல,ஏன் என் காதல் மேல கூட சத்தியம்.

அவனுக்கே சிரிப்பாக தான் இருந்தது. பீடி கொடுக்க கடவுள் என்ன ஹாஸ்டல் வாட்ச்மேனா?

மூஞ்சி கழுவிவிட்டு வரலாமென தோன்றியது அவனுக்கு. பாத்ரூம் அருகே விடுதியை சுத்தம் செய்யும் பணியாளர்கள் எவ்வித கவலையுமின்றி உறங்கிகொண்டிருந்தனர். அதில் ஒருவனது மேல் சட்டை பாக்கெட்டில் இரண்டு பீடிகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்த்தான் கதிரவன் அந்த காரிடரில் அவனைத்தவிர வேறு யாருமில்லை. கை செய்யப்போகும் வேலையை நினைத்து மனமும் நடுங்கியது. நாளைய இந்தியாவின் தூண் ஒரு பீடிக்காக தவறு செய்யலாமா? என மண்டைக்குள் கேள்வி கிளம்பியது. தலையை தட்டிவிட்டு தன் வாழ்வின் முதல் திருட்டை செய்தான் அவன். பீடி கைக்கு வந்தவுடன் விடுவிடுவென அறைக்கு சென்று தாளிட்டான். பீடியை வாயில் வைத்து தீக்குச்சியை பற்ற வைத்தபோது மனம் சொல்லியது " பீடியின் வெளிச்சம் வாழ்க்கையிலும் சீக்கரமே வரும்".





Friday, March 9, 2012

இருளப்பனின் காதல் கடிதம்!!



நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்தபடி கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தார் முத்துக்குமார்.

"ஐயா உங்களுக்கு கடுதாசி வந்திருக்கு" என பணிவுடன் நீட்டினான் அவரது உதவியாளன் முனுசாமி.

அனுப்புனர் பெயர் இருளப்பன் என குறிப்பிடப்பட்டிருந்தது. யார் இந்த இருளப்பன் என யோசித்துக்கொண்டே கடிதத்தை பிரிக்கத்தொடங்கினார் அவர்.


 மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
                           
                                                          உங்கள் மீது பாசமும் பற்றும் கொண்ட இருளப்பன் எழுதுவது. இது என் நிஜப்பெயர் அல்ல. நான் ஏன் இந்த பெயரை உபயோகப்படுத்துகிறேன் என உங்களுக்கு போகப்போக புரியும். என் காதலை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கடிதம்.
                                                         
                                                        என் பக்கத்து வீட்டில் வசிக்கும் மைனா(இதுவும் புனைப்பெயர் தான்) மீது எனக்கு ஒரு உய்யா(காதல்). ஆனால் அவளுக்கும் எனக்கும் நேரடி அறிமுகமே இல்லை. அவளெல்லாம் எனக்கெங்கே கிடைக்கப்போகிறான் என்ற சோகத்துடன் என வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருந்த போது தான் எங்கள் தெருவில் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைபட தொடங்கியது.மெகா சீரியல் பார்க்கும் வாய்ப்பை இழந்த என் அம்மாவும் அவள் அம்மாவும் எங்கள் தெருவில் நடக்கும் மெகா சீரியல்களை பற்றி என் வீட்டில் உட்கார்ந்து பேசத்தொடங்கினர்.
                                                     
                                                         ஒரு மாதம் கழிந்திருக்கும்.இப்போது ஐந்து மணி நேரம் மின்சாரம் தடை. தடையில்லா மின்சார சேவையும்(U.P.S) பல்லை காட்டிவிட்டதால் புரளி பேசும் பெண்கள் சபையில் மைனாவும் வந்து சேர்ந்தாள். சபை எங்கள் வீட்டில் நடப்பதால் அவ்வப்போது நானும் அங்கே தலைகாட்டி மைனாவுடன் அறிமுகமானேன். என் அதிர்ஷ்டத்தை என்னாலேயே நம்பமுடியவில்லை. அடுத்த மாதமும் வந்தது.
                                                   
                                                       எட்டு மணி நேர மின்சாரத்தடை. என் வாழ்க்கையின் வசந்த காலம் அது தான். கைபேசிகளும் ஐபாட்களும் சார்ஜ் இல்லாமல் செத்துப்போயின. புரளிகளும் புத்தகங்களும் புளித்துப்போன நிலையில் வேறு வழியில்லாமல் அவளும் என்னை காதலிக்க ஆரம்பித்தாள். இப்போது மின்சாரம் இல்லையெனில் அவள் அம்மாவுடன் என் வீட்டுக்கு வருவதில்லை . நாங்கள் தான் இப்போது தனி சபை அமைத்து விட்டோமே!!
                                                 
                                                      தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன, குழந்தைகள் பரீட்சைக்கு படிக்க வழியில்லை என்றெல்லாம் உங்களை குறை சொல்பவர்கள் தான் அதிகம். ஆனால் உங்களாலும் நன்மைகள் நடக்கிறது எனபதை நீங்கள் அறிந்து கொள்ளவே இந்த கடிதம். தெருவை இருட்டாக்கி என் வாழ்க்கயை வெளிச்சம் ஆக்கிய வள்ளலே நீங்கள் வாழ்க!!
                                                                                                                 
                                                                                          என்றும் அன்புடன்,
                                                                                         இருளப்பன்.


கடிதத்தை படித்துவிட்டு முனுசாமியிடம் நீட்டினார் தமிழக மின்சாரவாரியத்தலைவர் முத்துக்குமார்.

"என்ன சார் இப்படி எழுதிருக்கு?" என்ற படி கடிதத்தை புரட்டினான் அவன்

"எவனோ வேலை இல்லாதவன் பொழுது போக்குக்கு எழுதி இருக்கான். அதை தூக்கி குப்பையில போடு."

அதே நேரம் விளையாடச்செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இருளப்பனும் , தோழியின் வீட்டுக்கு படிக்கச்செல்வதாக கூறிவிட்டு முத்துக்குமாரின் மகள் மைனாவும் முதன்முறையாக இணைந்து சினிமாவுக்கு போயினர்.


                                                                                                                முற்றும்.
                                                           


Monday, January 9, 2012

காலன் காலிங்- 4


வாழ்க்கையில் நாம நினைக்குறது எப்பவுமே நடக்குறது இல்லைனு அன்னிக்கு தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். அர்த்தம் இல்லாததா கூட இருக்கலாம் ஆனா அன்னிக்கு என் வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்.அப்படி நடக்கல. ரெண்டு விஷயம் என்னை காப்பாத்துச்சு.
முதலாவது, என் அப்பா கிட்ட ஓரளவு பணம் இருந்தது அதுவும் போலிஸ் காரங்க வாயை மூடுற அளவுக்கு 2. ரெண்டாவது இறந்து போன ஆளோட மனைவி. சின்ன பையன்னு என்னை மன்னிச்சது மட்டுமில்ல ஒரு பைசா பணத்தை கூட அவங்க தொடலை. அவங்க எதுக்கு என்னை மன்னிக்கனும்?

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"

இந்த திருக்குறளை நான் அனுபவபூர்வமா தெரிஞ்சுகிட்டேன்.

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசாதீர்
எதிர்முனையில் அழைப்பது காலனாகவும் இருக்கலாம்.

சாலையோரம் இருக்கும் ஹோர்டிங்கள் எனக்காகவே எழுதின மாதிரி இருந்தது. சின்ன சின்ன விஷயங்கள் தான் ஆனா இதை தெரிஞ்சுக்கிறதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். ஆமா விலை ஒரு உயிர்.

சில மாதங்களுக்கு பிறகு...........

இப்போ நான் லைசன்ஸ் எடுத்துட்டேன். போன வாரம் மதுவை பக்கத்துல் உட்காரவைச்சு ஓட்டினேன் . என்னிக்காவது ஒரு நாள் எனக்கு தைரியம் வரும் போது அந்த அம்மாவை பாக்கனும்.  இன்னிக்கு காலையில வெங்கடாசலத்தை பாத்தேன். இப்போ அவன் பெட்ரோல் பங்க்ல வேலை பாக்குறான். என்னை பாத்ததும் திகைச்சு நின்னான் உடனே சுதாரிச்சுட்டு பேசனும்னு சொன்னான்.

மன்னிச்சுக்க தம்பி.
எதுக்கு நா?
நீ செல்போன் பேசுனதை நான் சொல்லிருக்க கூடாது.பயத்துல சொல்லிட்டேன்.
பரவாயில்ல விடுங்க.
என் மேல கோபம் ஒன்னும் இல்லையே?
புருஷனை கொன்னவனை மன்னிக்குறவங்க இருக்கும் போது இதை நான் ஒரு விஷயமா கூட எடுத்துக்ககூடாது.
அவ எப்பவுமே அப்படி தான் தம்பி. சரி நான் வர்றேன்.

வெங்கடாசலம் கிளம்பி விட்டான். நானும் தான். ஆனால் மனதின் ஓரம் ஒரு கேள்வி.


எதுக்கு சம்பந்தமே இல்லாம இத்தனை நாள் கழிச்சு மன்னிப்பு கேக்குறான்? அவ எப்பவுமே அப்படி தான் .அப்போ அவங்களை வெங்கடாசலத்துக்கு முதல்லயே தெரியும். அதை சொன்னப்ப அவன் மூஞ்சியில இருந்த சோகம் அன்னிக்கு அவனோட காதல் தோல்விய சொல்லுறப்ப இருந்த அதே சோகம். மை காட் அவங்க தான் வெங்கடாசலம் காதலிச்ச பொண்ணு.


ஸிட். அன்னிக்கு என்ன நடந்துச்சு? நான் தான் ஆக்சிடன்ட் பண்ணேனா? ஏன்னா உங்களுக்கு தெரியும்ல டிரைவிங் ஸ்கூல் வண்டியில ரெண்டு பக்கமும் ஆக்ஸிலரேட்டர், பிரேக் இருக்கும்னு?
 
                                                             முற்றும்.
                                                                                                                          என்றும் அன்புடன்,
                                                                                                                           ச.கார்த்திகேயன்.