என் டார்லிங்க அசத்தனுங்கிறதுக்காக தான் தினமும் சாயங்காலம் ட்ரைவிங் க்ளாஸ் போக ஆரம்பிச்சேன். பாவம் நான் சாயங்காலம் ஷட்டில் ஆடுறதா நினைச்சிட்டு இருக்கா, திடீர்னு ஒரு நாள் அவ முன்னாடி கார் ஓட்டிட்டு போய் நின்னா என்ன பண்ணுவா? முதல்ல ஷாக் ஆயிருவா அப்புறமா ஏதாவது கிடைக்கும். நான் கிஃப்ட சொன்னேன்! அந்த நினைப்பே எனக்கு ட்ரைவிங் கத்து கொடுத்துச்சு. வெங்கடாசலத்துக்கும் இதுல கொஞ்சம் பங்கு இருக்கு. வெங்கடாசலத்தை உங்களுக்கு தெரியாதுல? அவன் தான் என் ட்ரைனர். ஏதோ நினைப்புல எப்பவுமே சில கேரக்டர்கள் சுத்திட்டு இருக்குமே அவனும் அந்த வகையறா தான்,மத்த படி அவனை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல .
அன்னிக்கும் எல்லா நாளும் மாதிரி தான் ட்ரையினிங் போயிருந்தேன். நானும் வெங்கட்டும் (பெரிய பெயரா இருக்கு. ஒவ்வொரு தடவை சொல்லவும் கடுப்பா இருக்கும் காரணத்தால் இனி வெங்கடாசலம் "வெங்கட்" என அழைக்கப்படுவார்) தான் போனோம். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என் போன் மணி அடிக்க ஆரம்பிச்சுருச்சு.மது தான். பொய் சொன்னா கண்டுபிடுச்சுடுவா அதனால பேசலாமா ? வேணாமானு நான் முடிவு பண்றதுக்கு முன்னாடி கட் ஆயிருச்சு.
"தம்பி போன் பேசறதுனா ஓரமா நின்னு பேசுங்க. வண்டி ஓட்டும் போது கவனம் ரோட்டுல..."
வெங்கட் சொல்லி முடியும் முன் மீண்டும் மது போன் செய்து விட்டாள். அவன் ஓரக்கண்ணால் அவ காண்டக்ட் பிக்சரை சைட் அடிப்பது எனக்கு தெரிந்தது . வெடுக்கென கட் செய்து விட்டேன்.
"யாரு தம்பி உன் ஆளா?"
நான் பதிலேதும் சொல்லாமல் 'ஆம்' என்பது போல தலையை மட்டும் ஆட்டினேன்.
"நானும் ஒரு பொண்ணை காதலிச்சேன் ஆனா அவளை ஒருத்தன் ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டான்."
ஓ தலைவர் தேவதாஸா? ஏன் மூஞ்சில சாணி அப்புன மாதிரியே சுத்திட்டு இருக்கான்னு யோசிச்சதுக்கு காரணம் கிடைச்சிருச்சு. ஒரு இடைவெளி விட்டு அவனே தொடர்ந்தான்.
"தினமும் அவளை இன்னொருத்தன் பொண்டாட்டியா பாக்கிறது நரகம்யா"
அதுக்கு மேல அவனால சொல்ல முடியல . கண்ணெல்லாம் கலங்கிருச்சு. திரும்பவும் போன் அடிச்சுச்சு .மது தான் . உன்னை நான் எப்பவும் மிஸ் பண்ண மாட்டேன் மதுனு நினைச்சுட்டே அவ போட்டோவ பாத்துக்கிட்டே அட்டெண்ட் பண்ணும் போது
"தடார்".
இடிச்சவுடனே எனக்கு ஒன்னும் புரியல. வேகமா நானும் வெங்கட்டும் கீழ எறங்கினோம் அதுக்குள்ள சுத்தி கூட்டம் வேற கூடிருச்சு. கூட்டத்துக்கு நடுவுல தலையில ரத்தம் வழிஞ்ச படி ஒருத்தன் கெடந்தான்.
"குருட்டு*** போன் பேசிட்டே வந்து தூக்கிட்டான்யா"
"தண்ணி அடிச்சிருக்கானா? ஊது டா"
என்ன செய்றதுனு தெரியாம நின்னப்ப பின்னந்தலையில ஒரு அடி விழுந்துச்சு. சுதாரிக்கும் முன்னாடி ஒரு நாலைஞ்சு பேரு சேர்ந்து என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க . தடுக்க வந்த வெங்கட்டுக்கும் தர்ம அடி விழுந்துச்சு. வண்டியில் அடி பட்டவனை போலவே தலையில் ரத்தம் வழிந்த படி நானும் தரையில் விழுந்தேன்.