Friday, July 24, 2009

அன்று மழை பெய்தது - 9

வாங்க ஹரிதா.

மணிசங்கர் நீங்க உங்க கேபினுக்கு போகலாம்.

மணிசங்கர் அவனை முறைத்துக்கோண்டே வெளியேறினான்.ஹரிதா அப்பாவியாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.அவன் கேபினுக்கு செல்லவில்லை.கையில் நடுக்கம் தெரிந்தது.சிகரெட்டை எடுத்துக்கொண்டு கம்பெனியை விட்டு வெளியேறினான்.திரும்ப வந்த போது ஹரிதா அவனுக்காக காத்திருந்தாள்

என்ன ஆச்சு?
ஒன்னும் இல்ல.
தம் அடிச்சியா?

அவன் பதில் சொல்லவில்லை.காதலிகளிடமே உண்டான கெட்ட பழக்கம் இது.காதலிச்சா தம் அடிக்க கூடாது.தண்ணி அடிக்க கூடது.சைட் அடிக்க கூடாது.சுருக்கமா சொன்னா ஒரு ஆணியும் புடுங்க கூடாது.

என்ன பதில காணோம்?
டென்ஷன்.உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.
சொல்லு.

சாயங்காலம் பெசன்ட் நகர் பீச்சுக்கு போகலாம்

அவள் கல கலவென சிரித்தாள்.

இதுக்கு தான் இவ்ளோ டென்ஷனா?
இல்ல சாயங்காலம் சொல்றேன்.

அவளுக்காக பெசன்ட் நகர் கடற்கரை எதிரில் இருக்கும் பரிஸ்டாவில் காத்துக்கொண்டிருந்தான் மணிசங்கர்.இன்னும் கொஞ்ச நேரத்துல ஹரிதா வந்திருவா.அவ கிட்ட என்ன சொல்றது?எவ்ளோ சொல்றது என யோசித்துக்கொண்டிருந்தான்.அவன் முகத்தின் முன் கையை ஆட்டி அவன் சிந்தனையை கலைத்தாள் ஹரிதா.

என்ன ரொம்ப டல்லா இருக்க?
அதெல்லாம் இல்ல.
சும்மா சொல்லாத.காலையில் நான் உள்ள வந்தப்ப நீயும் மானேஜரும் ஏதோ சண்டை போட்டு கிட்டு இருந்த மாதிரி இருந்தது.
சண்டையெல்லாம் போடல. எனக்கு டிரான்ஸ்பர்.அடுத்த வாரத்துல இருந்து ஹெட் ஆபிஸ்.
என்ன திடீர்னு?
அவன் சரியில்லை ஹரிதா.
புரியல.யார சொல்ற?
தாமோதரன்.
இத்தனை நாளா ரவிகுமார திட்டிட்டு இருந்த.இப்போ இவரா?
அய்யோ உனக்கு புரியல.
உனக்கு தான் புரியல.ஹெட் ஆபிஸ் உனக்கு ப்ரோமோஷன் தானே?
வேலைல ப்ரோமோஷன கொடுத்துட்டு வாழ்க்கையில லே ஆஃப் கொடுக்க பாக்குறான்.
டையலாக் கேவலமா இருக்கு.

அவள் சிரித்தாள்.அவனுக்கும் அவளை கலவரப்படுத்த மனமில்லை.இன்னிக்கு
வேணாம் இன்னொரு நாள் சொல்லிக்கலாம்.

சரி அத விடு.
ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்ன?இது தானா?
இல்லை.
சரி அத சொல்லு.
ஐ லவ் யூ.

அவள் வாய் விட்டு சிரித்தாள்.இது தான் அவ கிட்ட அவனுக்கு ரொம்ப பிடிச்சது.
எந்த உணர்ச்சியையும் மறைக்காம அப்படியே வெளிய காட்டிடுவா. அவளுக்காக வாங்கி வைத்திருந்த மொபைலை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

என்ன இது?
ஒரு சின்ன கிஃப்ட்.
எதுக்கு?
சும்மா தான்.
சரி ஆனா ஒரு கண்டிஷன்.பர்த் டே க்கு வேற கிஃப்ட் தரனும்
கண்டிப்பா தர்றேன் போதுமா?
ஒகே.

அவள் மொபைலை எடுத்துக்கொண்டாள்.அவள் தெருமுனை வரை பேசிக்கொண்டே வந்தாள்.அவன் இப்போதே தலையாட்டி பழகத்தொடங்கினான்.

நிறுத்து.இங்கயே இறங்கிக்கிறேன்.
ஏன் வீட்டுலயே இறக்கி விடுறேனே?
எதுக்கு நான் வேலை பாக்குறது உனக்கு புடிக்கலயா?
கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கெல்லாம் போகக்கூடாது.
இவ்ளோ கண்டிஷன் போட்டா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி யோசிக்க வேண்டியிருக்கும்.
அடி.

செல்லமாக கோபித்துக்கொண்டு திரும்பினாள்.அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

ஒய்
என்ன?
உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன்.
என்ன?

அவள் ஹேன்ட் பேக்கை துழாவத்தொடங்கினாள்.

கண்ண மூடு குடுக்குறேன்.

தலையாட்டிக்கொண்டே கண்ணை மூடினான்.அவள் அவசரம் அவசரமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு விலகி நின்றாள்.அவன் திகைப்புடன் கண்ணை திறந்தான்.அவனை பார்த்து கண்ணடித்து விட்டு திரும்பி நடந்தாள்.

ஹரிதா
என்ன டா?
தாமோதரன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.நான் சொல்றது புரியுதுல்ல?
அய்யோ புரியுது.

அலட்சியமாக சொல்லி விட்டு அவள் ஏதோ பாடலை முனுமுனுத்த படி நடக்கத்தொடங்கினாள்.

முதல் காதல்.முதல் முத்தம்.முதல் சிகரெட். இது மூன்றையும் ஒரு மனிதனால் எப்போதும் மறக்க முடியாது.அவை ஆசிர்வதிக்கப்பட்ட தருணங்கள்.அவள் வீடு போகும் வரை நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
கிளம்புவதற்கு முன் தெருவை சுற்றி நோட்டம் விட்டான்.

யாருக்கு தெரியும் அந்த தாமோதரன் ****** இங்க தான் எங்கயாச்சும் சுத்திட்டு இருப்பான்.

அதே யோசனையுடன் வீடு திரும்பினான் மணிசங்கர்.அவன் வீட்டு வாசலில் தாமோதரன் நின்று கொண்டிருந்தான்.

Wednesday, July 22, 2009

அன்று மழை பெய்தது-8

ஹரிதாவை பத்தி நினைக்குற நேரத்த விட தாமோதரனை பத்தி நினைக்குற நேரம் தான் அவனுக்கு அதிகமா தெரிஞ்சது. காதல் பேசி அழைத்தது. பேச்சுவாக்கில் ஹரிதாவிடம் கேட்டான்.

புது மானேஜர் எப்படி?
பரவாயில்ல

இன்னும் பையன் வேலைய ஆரம்பிக்கல போல என நினைத்துக்கொண்டான்.

சரி ஷாப்பிங் போனும்னு சொன்ன?எத்தன மணிக்கு?
நீ தான் வரலைனு சொல்லிட்டல்ல.அப்புறம் என்ன?
சும்மா தான்.என்ன திடீர் ஷாப்பிங்?
அடுத்த வாரம் எனக்கு பிறந்த நாள் வருது.அதான் ட்ரெஸ் எடுக்க போறேன்.
சரி.எங்க போற?
ஸ்பென்சர்.லேட் ஆகுது.நான் போயிட்டு வந்து கூப்பிடுறேன்.பை.
பை

ஒரு வழியாக அவள் ஷாப்பிங் முடித்த போது மணி 9.30 ஆகிவிட்டிருந்த்து.
உடலில் சோர்வு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தாள்.சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகலாமா இல்லை வீட்டுக்கு போய் சாப்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தபோது தான் அவனை கண்டாள்.கையில் யுனிவெர்செல் கவர்.
அவனை பார்த்ததும் அவளுக்கு கோபம் தான் வந்தது.அவன் எண்ணை மொபைலில் அழுத்தினாள்.

ஹலோ
எங்க டா இருக்க?
என்ன மரியாதை குறையுது?நான் வெளிய இருக்கேன்.
நானும் அதே வெளிய தான் இருக்கேன்.ரைட்ல திரும்பி பாரு.

அசடு வழிந்த படி திரும்பினான் மணிசங்கர்.

இங்க என்ன பண்ற?ஸ்பென்சர் தானே போறேன்னு சொன்ன?
என் கூட ஷாப்பிங் வர மாட்டேன்னு சொல்லிட்டு சிட்டி சென்டர்ல உனக்கு என்ன வேலை?
போலியாய் முகத்தில் கோபம் காட்டினாள் அவள்.அவள் எத்தனை அழகு என அப்போது தான் அவன் முழுதாய் உணர்ந்தான்.
சும்மா தான் வந்தேன்.
மொபைல் புதுசா?குடு பாப்போம்
இது ரொம்ப வேண்டியவங்களுக்கான பிறந்த நாள் பரிசு.வேற யார் கிட்டவும் காட்ட முடியாது.
அது சரி.
அவள் சட்டென சிரித்தாள் அவன் அதில் தொலைந்தான்.

ஹேய் அங்க பாரு நம்ம புது மானேஜர்

சட்டென அவன் முகம் கறுத்தது

எங்க?
அதோ பழமுதிர்ச்சோலைல பாரு
சரி வா நாம கிளம்புவோம்.மணி 10 ஆச்சு
சரி.

ஹரிதாவுடன் கை கோர்த்த படி நடக்க ஆரம்பித்தான் மணிசங்கர்.பத்தடி நடந்திருப்பான்.திடீரென திரும்பி தாமோதரன் பக்கம் திரும்பினான்.தாமோதரன் ஹரிதாவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அது வரை கண்களில் இருந்த காமம் மணிசங்கர் பக்கம் திரும்பியதும் வெறியாக மாறியது.மணிசங்கர் அவள் கைகளை அழுத்திப்பிடித்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை.தாமோதரனின் முகம் தான் நிழலாடிக்கொண்டிருந்தது.மறுநாள் அலுவலகம் நுழைந்ததும் தாமோதரனால் அழைக்கப்பட்டான்

குட் மார்னிங் மிஸ்டர் மணிசங்கர்
குட் மார்னிங் சார்
உங்களை ஹெட் ஆபிஸ்க்கு மாத்தலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.அடுத்த மாசத்துல இருந்து உங்களுக்கு 3,000 இன்க்ரிமென்ட்.கங்கிராட்ஸ்

கை குலுக்க நீட்டினான் தாமோதரன்

தேங்க் யூ சார்

தயக்கத்துடன் கைகுலுக்கி விட்டு கிளம்பினான் .அறைக்கதவை திறக்கும் போது அவனை தாமோதரன் கூப்பிட்டான்.

மணிசங்கர்
என்ன சார்?
அப்படியே போகும் போது ஹரிதாவை வரச்சொல்ல முடியுமா?

மணிசங்கருக்கு சுள்ளென்று ஏறியது அப்படியே தாமோதரன் பக்கம் திரும்பினான்.

எதுக்கு சார்?

இருவரும் ஒருவரை ஒருவர் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அறைக்கதவை யாரோ தட்டுவது போல இருந்தது.இருவரும் திரும்பினார்கள்.

எக்ஸ்க்யூஸ் மீ

ஹரிதா எட்டிப்பார்த்தாள்.

Wednesday, July 8, 2009

அன்று மழை பெய்தது-7

யாரும் கவனிக்காதவாறு ஒரமாக சென்று அமர்ந்தான் மணிசங்கர்.தாமோதரன் பேசத்தொடங்கினார்.

வணக்கம்

மைக்கை தட்டிப்பார்த்தான்.உங்களை சந்திக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.என் பெயர் தாமோதரன்.நான் தான் உங்க புது ப்ராஜக்ட் மானேஜர்.அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க சரியா பண்ணாலே போதும் எல்லாம் நல்ல படியா போகும்.நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.எல்லோரும் போய் வேலைய பாருங்க.

மணிசங்கரால் நம்பவே முடியவில்லை.அன்னிக்கு அந்த பம்பு பம்புனானே அவனா இவன்?அவன் சிந்தனையை கலைக்க செல்போன் அலறியது.எடுத்து பார்த்தான் ஹரிதா மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

சென்னை வந்தாகிவிட்டது.மதியம் சந்திப்போம்.

விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டான் மணிசங்கர்.அடுத்து என்ன நடக்கும்னு அவனால நெனைச்சு கூட பார்க்க முடியவில்லை.ஒரு வேலை ஹரிதாவ அடையாளம் கண்டு பிடிச்சுருவானோ?கண்டுபிடிச்சா என்ன?அவளுக்கு தான் இவனை தெரியாதே.அவசரப்பட்டு எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு நாமளே காட்டி கொடுத்த கதையாகிட கூடாது.மதியம் நிலவரத்த பாப்போம்.காலண்டரில் பார்த்தான்.1.30-2.30 ராகு காலம்.மதியம் நெருங்கியது.வழி மேல் விழி வைத்து ஹரிதாவுக்காக காத்திருந்தான் மணிசங்கர்.

சரியாக 1.35க்கு வந்து சேர்ந்தாள் ஹரிதா.அவனை பார்த்ததும் அவள் வாயில் இருந்து வந்த முதல் வார்த்தை

கங்கிராட்ஸ்.சாதிச்சு காட்டிட்ட போல
நீ என்ன சொல்ற?
உதட்டில் போலிப்புன்னகையை ஏந்தினாலும் முகத்தில் பதட்டம் அவனை காட்டி கொடுத்தது
ஒரு வழியா ரவிக்குமார ஓடவிட்டுட்ட.புது மானேஜர் எப்படி?
இனிமே தான் தெரியும்
கவலை படாத.நல்லவனா தான் இருப்பான்.
இருந்தா பரவாயில்ல.
சரி நான் போயி பாத்திட்டு வர்றேன்
ஆல் த பெஸ்ட்

அவளுக்கு அவனை பார்க்கையில் சிரிப்பு வந்தது

நான் என்ன பரீட்சைக்கா போறேன்?
இருக்கலாம்

இன்னிக்கு உனக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு. நான் வர்றேன்.
அவள் சிரித்துக்கொண்டே தாமோதரன் அறையை நோக்கி நடந்தாள்.பைத்தியம் இன்னிக்கு தான் பிடிச்சிருக்கா?மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் மணிசங்கர்.இன்னும் அஞ்சு நிமிஷம் தான்.பொறுத்துக்கோ.எப்போது தாமோதரனின் அறைக்கதவு திறக்கும்?எப்போது ஹரிதா வெளியே வருவாள்?

கம்பெனியை விட்டு வெளியே வந்து சிகரெட்டை பற்ற வைத்தான்.
அவன் மீண்டும் உள்ளே செல்லும் போது ஹரிதா அவள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்போவே போய் கேட்டா ஒரு வேளை சந்தேகப்படுவாளோனு அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது அதுனால அவளா வந்து சொன்னா கேட்கலாம்னு அவன் வேலையை பார்க்க போனான்.ஆனால் வேலையில் மனம் இறங்கவில்லை.எட்டி அவளைப்பார்த்தான்.அவள் அமைதியாக வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.ஒன்னும் நடக்கல. தாமோதரனுக்கு அவளை ஞாபகம் இல்லை போல.ஞாபகம் இருந்தா ஹரிதாவை கேட்டிருப்பான் அவன் கேட்டிருந்தா அவ நம்ம கிட்ட சொல்லி இருப்பா.நிம்மதி பெருமூச்செறிந்தான் மணிசங்கர்.

மனித மனம் குரங்கு போல கிளைக்கு கிளை தாவிச்செல்லும் என்பது தான் எத்தனை உண்மை?இந்த குரங்கும் கிளை தாவியது.ஒரு வேளை அவனும் பொறுமையா டீல் பண்றானா?இல்லை எனக்கு தான் இப்படி தோணுது.யாருக்கும் யாரையும் தெரியாது.எதுக்கும் போய் அவன் என்ன பண்ணிட்டு இருக்கிறான்னு பாத்திட்டு வந்திடலாம்.

ஒரு ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு தாமோதரனது அறைக்குள் நுழைந்தான் மணிசங்கர்.தாமோதரனது முகம் கொஞ்சம் சுருங்கி போய்த்தான் இருந்தது.அது இது என்று ஒரு பத்து நிமிடம் அவனிடம் மொக்கையை போட்டுவிட்டு கிளம்பினான் மணிசங்கர்.அறைக்கதவை திறக்கும் போது அவனை தாமோதரன் கூப்பிட்டான்.

மணிசங்கர்
என்ன சார்?
மிஸ் ஹரிதாவை வரச்சொல்ல முடியுமா?

எதுக்கு?தொண்டை வரை வந்த வார்த்தைகளை முழுங்கினான் மணிசங்கர்.

சொல்லிடுறேன் சார்.